அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் மயங்கி விழுந்து பரிதாப சாவு


அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் மயங்கி விழுந்து பரிதாப சாவு
x
தினத்தந்தி 12 Jun 2018 11:59 PM GMT (Updated: 12 Jun 2018 11:59 PM GMT)

மதுரவாயலில் போக்குவரத்து போலீஸ்காரருடன் ஏற்பட்ட தகராறின் போது அ.தி.மு.க. பிரமுகர் நடுரோட்டில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். ஆனால் போக்குவரத்து போலீஸ்காரர் தள்ளியதில் தந்தை இறந்ததாக மகன் புகார் அளித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

பூந்தமல்லி,

மதுரவாயலை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது59). அ.தி.மு.க. பிரமுகரான இவர் நேற்று தனது மகன் வினோத்துடன் காரில் வீட்டில் இருந்து கோயம்பேட்டிற்கு சென்றார்.

மதுரவாயல் ரேஷன் கடை பஸ் நிறுத்தம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனால் வாகனங்கள் கடந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

அப்போது சாலையை காரில் சதீஷ் குமார் கடந்து வந்தபோது “ஏன் காரை அனுப்ப இவ்வளவு நேரம் ஆனது” என்று கூறினார். இதனால் அவருக்கும் போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முடிந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சதீஷ்குமாரை, போலீஸ்காரர் பிடித்து தள்ளியதில் சதீஷ்குமார் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்து விட்டதாக அவரது மகன் வினோத் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்து இருந்தார். இந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ‘சாலையை கடக்கும்போது போக்குவரத்து போலீசுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்த சதீஷ்குமார், போக்குவரத்து போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். வாக்குவாதம் முடிந்த நிலையில் சதீஷ்குமார் காரில் ஏற செல்ல முயன்றபோது நடுரோட்டில் மயங்கி கீழே விழுவது போலும் உடனே அதே போக்குவரத்து போலீஸ்காரர் அவரை மீட்டு காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீஸ் மற்றும் இறந்துபோன சதீஷ்குமாரின் மகன் வினோத் ஆகியோரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர்.

இறந்து போன சதீஷ்குமாருக்கு ஏற்கனவே இருதயம் சம்பந்தப்பட்ட ஆபரேசன் நடைபெற்று இருப்பதும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததும் உணர்ச்சிவசப்பட்டு ஆவேசமாக பேசியதால் மாரடைப்பு ஏற்பட்டு சதீஷ்குமார் இறந்து போனது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து சதீஷ்குமார் மாரடைப்பால் இறந்து போனதாக போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தவறான தகவல் அளித்த சதீஷ்குமாரின் மகன் வினோத்தை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்

Next Story