அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை முழுமையாக விசாரிக்க உத்தரவு


அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை முழுமையாக விசாரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2018 12:15 AM GMT (Updated: 13 Jun 2018 12:15 AM GMT)

தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் கே.டி. ராஜேந்திரபாலாஜி. விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வான இவர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும் இருக்கிறார்.

சென்னை,

மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது சொத்து குவிப்பு புகார் தெரிவித்தார். அவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, ராஜபாளையம் அருகே தேவதானத்தில் ரூ.74 லட்சத்துக்கு 35 ஏக்கர் நிலம் வாங்கி உள்ளார். இந்த நிலத்தின் அசல் மதிப்பு ரூ.6 கோடி ஆகும். இதுதவிர திருத்தங்கல் பகுதியில் ரூ.23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், ரூ.4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கி உள்ளார்.

இந்த சொத்துகளின் சந்தை மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகமாகும். தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய்க்கு சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். குறிப்பாக 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.7 கோடிக்கு சொத்துகள் வாங்கி உள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தேன். ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகார் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இந்த மனு கடந்த 2014-ம் ஆண்டு விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை அதிகாரி, ‘ராஜேந்திரபாலாஜி மீதான புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதனால் அவர் மீது, லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியது இல்லை’ என்று அறிக்கை அளித்தார். அந்த அறிக்கையை ஏற்று ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகார் மீதான மேல் நடவடிக்கையை கைவிட பொதுத்துறை செயலாளர் 4.2.2014 அன்று உத்தர விட்டார். அதன்படி மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டபடி விசாரணை தொடர்பான ஆவணங் களை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் தாக்கல் செய்தார்.

மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு மதுரை கிளையில் முடிவடைந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறினர். தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-

அமைச்சராக பதவி வகித்து வரும் கே.டி.ராஜேந்திரபாலாஜி 23.5.2011 முதல் 20.4.2013 வரையிலான கால கட்டத்தில் மட்டும் சொத்துகள் வாங்கியதை மட்டும் கணக்கில் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி புகார் மீது நடவடிக்கை தேவையில்லை எனக்கூறி புகாரை முடித்துள்ளது. இது சரியானது அல்ல.

1996-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை அவர் திருத்தங்கல் பேரூராட்சியின் துணைத்தலைவராக பதவி வகித்துள்ளார். அப்போது இருந்தே அவர் பொது ஊழியராகத்தான் இருந்து வருகிறார். எனவே, அந்த கால கட்டத்தில் இருந்து அவர் வாங்கிய சொத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். 1996-ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு(2018) பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் அவரது வருமானத்தை கணக் கில் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

எனவே, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு புகாரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முழுமையாக விசாரிக்க வேண்டும். போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும்.

விசாரணை குறித்த அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் சீலிடப்பட்ட கவரில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை குறித்த முதல் அறிக்கையை ஆகஸ்டு 3-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்டு 6-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story