மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் ரூ.84 கோடியில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டை விரிவாக்கம் + "||" + Expansion of SIDCO Industrial Estate in Kanchipuram at Rs 84 crores

காஞ்சீபுரத்தில் ரூ.84 கோடியில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டை விரிவாக்கம்

காஞ்சீபுரத்தில் ரூ.84 கோடியில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டை விரிவாக்கம்
காஞ்சீபுரத்தில் ரூ.84 கோடியில் ‘சிட்கோ’ தொழிற்பேட்டை விரிவாக்கம் செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தால் (சிப்காட்) திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்தில் உள்ள கண்ணுடையான்பட்டி, கே.பெரியபட்டி மற்றும் சத்திரப்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 1,077 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.


இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெருவிளக்குகள் அமைத்தல் போன்ற வசதிகள் ரூ.96 கோடி மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும்.

‘சிப்காட்’ நிறுவனத்தால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள பெலாப்குப்பம், கொல்லார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய வருவாய் கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர். இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்புறச் சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான வசதிகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள் மற்றும் தெரு விளக்குகள் போன்ற வசதிகள் ரூ.52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ‘சிப்காட்’ நிறுவனத்தால் உருவாக்கப்படும்.

தொழில்நுட்பம் சார்ந்த புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் மேம்படுத்துதலுக்கு உதவி செய்யவும், தொடக்க நிலை தொழில் முனைவோருக்கு ஆரோக்கியமான சூழலை உறுதிப்படுத்தவும், “தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கக் கொள்கை 2018-2023”-ஐ உருவாக்கி, தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்த உள்ளது.

இக்கொள்கையினால், அனைத்துத் துறைகளிலும் உள்ள திறமையுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் தங்களுடைய புத்தாக்க எண்ணங்களை செயல்படுத்தி, சிறந்த தொழில் முனைவோர்களாக உருவாக்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க முடியும்.

“தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை-2023”-ல் குறிப்பிடப்பட்டுள்ள, ஆண்டுக்கு 11 சதவீத மாநில மொத்த உள்நாட்டு வளர்ச்சி வீதத்தினை அடையும் வகையில் இக்கொள்கை அமையும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வரும் முதலீட்டு மானியச் சலுகைக்கு இணையாக புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் பயனாளிகளுக்கும், அதிகபட்ச மானியத் தொகை ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

2018-2019-ம் நிதியாண்டில், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில், 70.33 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.84 கோடி மதிப்பீட்டில், சிட்கோ தொழிற்பேட்டை-பகுதி 2 நிறுவப்படும்.

புத்தாக்க பற்றுச் சீட்டு திட்டம் மூலமாக புத்தாக்கம் சார்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு புத்தாக்கம்/தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநர்கள் மூலமாக புத்தாக்கத்தினை உருவாக்குதல் அல்லது கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பரிசோதனை கூடங்கள் மூலமாக முன்மாதிரி மேம்பாடு மற்றும் பொருட்கள் பரிசோதனை செய்வதற்காக அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக ரூ.20 கோடி செலவிடப்படும்.

கடந்த 5-ந்தேதி இப்பேரவையில் நான் அறிவித்த ”ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை” அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக, எளிதில் மக்கக் கூடிய மாற்றுப் பொருட்களை கண்டறியவும் இத்திட்டம் பெரிதும் உதவும்.

தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை பன்னாட்டு மயமாக்கவும், வெளிநாட்டு ஒத்துழைப்பைப் பெறவும், தமிழ்நாட்டில் முதலீட்டை ஈர்க்கவும், “குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்பு” ஒன்று உருவாக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் ரூ.4 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். ராமேசுவரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றக் கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் ரூ.6 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடத்தின் மேல் தளங்களில் சார்பு நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கூடுதலாக இரண்டு நீதிமன்ற அறைகள் மற்றும் அலுவலகங்கள், ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு உணவகம், இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டிடம் மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய இரண்டு குடியிருப்புகள் ரூ.6 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றக் கட்டிடம், சைக்கிள் நிறுத்தம், வாகன நிறுத்தம், உணவகம், பொது கழிப்பிடம் மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய குடியிருப்பு ரூ.8 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் மற்றும் குடியிருப்புகள் ரூ.5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

தர்மபுரி மாவட்டம் அரூரில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டப்படும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

அதிகம் வாசிக்கப்பட்டவை