மணல் விற்பனையில் ஊழல்: புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்


மணல் விற்பனையில் ஊழல்: புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 11:12 PM GMT (Updated: 13 Jun 2018 11:12 PM GMT)

மணல் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குற்றங்களை தடுக்கும்படி கோரிக்கை வைத்தால் ஆதாரங்களை அழிப்பது தான் அ.தி.மு.க. அரசின் வாடிக்கையாக உள்ளது. ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசினுடைய இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது. தமிழகத்திலுள்ள ஆறுகளில் கட்டுப்பாடு இல்லாமல் மணல் கொள்ளை அடிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

தமிழக அரசு தெரிவித்தவாறு 48 மணல் குவாரிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.86.33 கோடி மட்டுமே வருவாய் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், ஒவ்வொரு குவாரியிலும் ஒரு நாளைக்கு சராசரியாக 61 லாரி மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும், 48 குவாரிகளிலும் சேர்த்து 2,928 லாரி மணல் மட்டுமே அள்ளப்படுவதாகவும் தான் பொருள் ஆகும். மணல் எடுப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மோசமான பாதிப்புகளுடன் ஒப்பிடும்போது, இந்த வருவாய் மிகவும் குறைவாகும்.

நடப்பாண்டுக்கான நீர்ப்பாசனத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட உள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும்.

இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப்பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூடவேண்டும். அதுமட்டுமின்றி மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Next Story