மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முன்பு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீண்டும் இன்று ஆஜராக உத்தரவு + "||" + Commission to inquire into Jayalalithaa's death before former police commissioner George replies

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முன்பு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீண்டும் இன்று ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையம் முன்பு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மீண்டும் இன்று ஆஜராக உத்தரவு
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.

பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விசாரணை செய்யவில்லை. மேலும் தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன்.

இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.

தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.

தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.