மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடக்கம் + "||" + Construction works of Jayalalithaa Memorial Hall

ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடக்கம்

ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடக்கம்
ரூ.50.80 கோடி செலவில் அமைக்கப்பட உள்ள ஜெயலலிதா நினைவு மண்டபத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது.
சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி உயிரிழந்தார். அவருடைய உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதி அருகே இடம் ஒதுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட இடத்தை பார்ப்பதற்கு ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் குவிந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தை நினைவு மண்டபமாக மாற்ற தமிழக அரசு முடிவு எடுத்தது. அதற்கான டெண்டரும் விடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மார்ச் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

நிதி ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கான அடுத்த கட்ட பணிகளும் துரிதமாக நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 8-ந்தேதி மெரினா கடற்கரையில் ஜெயலலிதா சமாதியில் நினைவு மண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று யாக சாலை நடத்தி, கல்வெட்டையும் திறந்து வைத்தனர். இதுதொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் சுமார் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது. இந்த நினைவிடத்தில் பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் நினைவு சின்னம், அருங்காட்சியகம், அறிவுத்திறன் பூங்கா, கருங்கல்லால் ஆன நடைபாதை வசதி, புல்வெளி மற்றும் நீர்தடாகங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கட்டுமான வரைபடம் இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஜெயலலிதாவின் சமாதி அருகே இரும்பு தகரத்தினால் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது. இதனால் ஜெயலலிதாவின் சமாதியை, எம்.ஜி.ஆர். நினைவு மண்டபம் அருகே இருந்தபடி பார்க்க வசதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நேற்று தொடங்கியது.

ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தார், ராட்சத கிரேன்கள், கலவை எந்திரங்கள் உதவியுடன் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டுமான பணிகளை ஓராண்டு காலத்துக்குள் (12 மாதத்துக்குள்) முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும், டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாளில் நினைவு மண்டபத்தை திறப்பதற்கு ஏதுவாக அதற்குள் பணிகளை முடிக்க கட்டுமான நிறுவனத்திடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.