மாநில செய்திகள்

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு + "||" + The scholarships offered to Tamil scholars are Rs 3500

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு

தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3,500 ஆக உயர்வு
தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.3,500 ஆக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.பாண்டியராஜன் அறிவித்தார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று மானியக் கோரிக்கை விவாதம் முடிந்ததும், தமிழ் வளர்ச்சித்துறை சார்ந்த அறிவிப்பை அத்துறையின் அமைச்சர் கே.பாண்டியராஜன் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஊர்ப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்துச் செயற்படுத்த ரூ.5 லட்சம் வழங்கப்படும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகாற்சோழன் கலையரங்கம் ரூ.4 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் பழமையான கட்டிடங்கள் ரூ.3 கோடியே 50 லட்சத்து 80 ஆயிரம் செலவில் சிறப்பு சீர்காப்பு செய்யப்படும்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகச் சுற்றுச்சுவர் ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் அமைக்கப்படும். தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகளார் பெயரில் புதிய விருது தோற்றுவித்து ஆண்டுதோறும் வழங்கப்படும். தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் புதிய விருது தோற்றுவித்து ஆண்டுதோறும் வழங்கப்படும்.

எல்லைக் காவலர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். எல்லைக் காவலர்களின் மரபுரிமையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தமிழறிஞர்களின் மரபுரிமையருக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகச் சிற்பத் துறையின் வழி ரூ.50 லட்சம் செலவில் சிற்பக்கலைப் பயிற்சி கூடம் சுவாமிமலையில் அமைக்கப்படும். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக நூலகம் மின்னணு நூலகமாக ரூ.50 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ரூ.39 லட்சத்து 34 ஆயிரம் வழங்கப்படும். உள்நாட்டு, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அளிக்கப்படும் தமிழ் ஆய்வேடுகளைத் தமிழாய்வு வலைத்தளத்தில் தொகுக்கும் பணிக்கு தொடர் செலவினமாக ரூ.7 லட்சத்து 30 ஆயிரமும், தொடராச் செலவினமாக ரூ.50 லட்சமும் வழங்கப்படும்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.1 கோடியே 54 லட்சம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழக இணைவகமான மெரினா வளாகத்தில் தொல்காப்பியர் சிலை நிறுவப்படும். மு.தமிழ்க்குடிமகன், மேலாண்மை பொன்னுசாமி, பொன்.சவுரிராஜன் ஆகிய தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும்.

தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள் ஈமச் சடங்குத் தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். எல்லைக் காவலர், தமிழறிஞர், அகவை முதிர்ந்த தமிழறிஞர், மரபுரிமையர் மருத்துவப்படி ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.