தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் -தங்க தமிழ்செல்வன் நம்பிக்கை


தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் -தங்க தமிழ்செல்வன் நம்பிக்கை
x
தினத்தந்தி 14 Jun 2018 6:25 AM GMT (Updated: 14 Jun 2018 6:25 AM GMT)

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என தங்க தமிழ்செல்வன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், எனவே அவரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் கவர்னரிடம் புகார் கொடுத்ததால், அந்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ப.தனபால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். 

இதை எதிர்த்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கில் சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய  தங்க தமிழ்ச்செல்வன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம். எங்களுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் நான் மட்டும் மேல்முறையீடு செய்யமாட்டேன். நீதிமன்றத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நீதிமன்றத்தை மதிக்கிறோம். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தொகுதிக்கு சென்று மக்களை சந்திக்க முடியவில்லை. கட்சி தாவல் அடிப்படையில் எங்களை தகுதிநீக்கம் செய்யவில்லை. நாங்கள் இடைத்தேர்தல் வந்தால் அதனை சந்திக்கவும் தயாராக உள்ளோம், ஒற்றுமையாக உள்ளோம். 18 பேரும் மீண்டும் வெற்றி பெறுவோம் என கூறிஉள்ளார் தங்க தமிழ்செல்வன். 18 பேரில் ஒருவர் வெற்றிபெறாவிட்டாலும் மற்ற 17 பேரும் ராஜினாமா செய்வோம் அந்த அளவிற்கு ஒற்றுமையாக உள்ளோம் எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

Next Story