மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனம் ரத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனம் ரத்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 14 Jun 2018 8:46 AM GMT (Updated: 14 Jun 2018 8:46 AM GMT)

மதுரை காமராஜர் பல்கலை கழக துணைவேந்தர் நியமனத்தினை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் ஓராண்டுக்கு மேலாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது.  இதேபோன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது.

இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு மே 27ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக துரைசாமியும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரையும் நியமிக்கப்பட்டனர்.

ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்படுவதற்கு ஒருவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும். ஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள செல்லதுரைக்கு பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் கிடையாது என குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதனால், அவரை துணை வேந்தராக நியமனம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பணி நியமனம் செய்த உடனேயே அவருக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.

இதுபற்றி சென்னை உயர் நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இதன் மீது இன்று விசாரணை நடந்தது.  இதில் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தின் துணைவேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

Next Story