மாநில செய்திகள்

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் + "||" + In various cases in Tamilnadu The lives of the dead are relieved

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம்
தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்தார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதி தொடர்பாக பல்வேறு உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், திருவையாறு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த சித்தன் என்பவரின் மகன் முருகன் 31.5.2018 அன்று கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த போது, கட்டிட விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.


அவருடைய குடும்பத்திற்கு ரூ.ஒரு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி, சு.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகள் மகாலட்சுமி 7.6.2018 அன்று, பள்ளி கழிவறையில் மயங்கிய நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.ஒரு லட்சம் வழங்கப்படும்.

தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் உள் வட்டம், திப்பிரெட்டி அள்ளி தரப்பு குக்கல்மலை கிராமத்தில் 3.6.2018 அன்று திடீரென இடியுடன் கூடிய மழை பெய்த போது, இடி தாக்கியதில், ராதாகிருஷ்ணன் என்பவரின் மகள் வித்யா உயிரிழந்தார்.

இயற்கை பேரிடரில் உயிரிழந்த காரணத்தினால் தற்போதைய நடைமுறைகளின்படி அவருடைய குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மாவலிங்கை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் பூபதி மற்றும் முருகேசன் என்பவரின் மகன் பாரதி ஆகிய இருவரும் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தனர். அவர்களுடைய குடும்பத்திற்கு தலா ரூ.ஒரு லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புஞ்சை புளியம்பட்டி உள்வட்டம், நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஏரியில் 31.5.2018 அன்று குளிக்கச் சென்ற மாதம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி என்பவரின் மகன் ராஜ்குமார், சுரேஷ் என்பவரின் மகன் கவுதம் மற்றும் செல்வன் என்பவரின் மகன் சஞ்சய் ஆகிய 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களுடைய குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம், சேனங்கோடு, திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த நெல்லையப்பன் என்பவர் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் என்பவர் 9.6.2018 அன்று வீசிய பலத்த காற்று மற்றும் மழையினால், மின்கம்பி அறுந்து விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், விளவங்கோடு வட்டம், அருமனை கிராமத்தைச் சேர்ந்த பாலஸ் என்பவரின் மகன் அகஸ்டின் 10.6.2018 அன்று, தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றினால் மரம் முறிந்து, மின்கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார், ஆறுதேசம் கிராமத்தைச் சேர்ந்த கொச்சப்பி என்பவரின் மகன் பாலையன் 10.6.2018 அன்று பலத்த காற்று மழையினால், அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இச்சம்பவங்களில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு தற்போதைய நடைமுறைகளின்படி, தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தேவையூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த உளியன் என்பவரின் மகன் செல்வராஜ் 10.6.2018 அன்று, இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மின் கம்பம் மீது உரசி, மின் கம்பம் சாய்ந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவருடைய குடும்பத்திற்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டம், திருவையாறு வட்டம், வரகூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் கூரை வீடு மின் கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்ததில், அவருடைய மகள் கீர்த்தி என்பவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், அனவயல் கிராமத்தைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் தமிழ்செல்வன் அவரது தோட்டத்தில் உள்ள மரத்தில் ஏறும் போது, மின்சாரம் தாக்கி, உயிரிழந்தார். அவருடைய குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி ரெட்டி என்பவரின் மகன் கண்ணியப்பன் 9.6.2018 அன்று அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

அவருடைய குடும்பத்திற்கு தற்போதைய நடைமுறைகளின்படி முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.