மாநில செய்திகள்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது + "||" + In relation to the organ transplant Publish white report The government is ready

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக உள்ளது
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இறுதியாக, தி.மு.க. உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் (பழனி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு.

ஐ.பி.செந்தில்குமார்:- மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் விபத்து சிகிச்சை பிரிவு உள்ளது. இதை தாலுகா அளவில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் கொண்டுவர வேண்டும். தொலைநோக்கு திட்டம்-2023-ல் நீங்கள் என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்றால், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் நகர்புறங்களில் 15 நிமிடத்திலும், புறநகர் பகுதிகளில் 30 நிமிடத்திலும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துவரப்படும் நிலை உருவாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- மெட்ரோ நகரமான சென்னையில் தற்போது 8.32 நிமிடம் என்ற அளவில் இந்த விகிதாச்சாரம் குறைந்துள்ளது. புறநகர் பகுதியிலும் கடந்த ஆண்டு 16 நிமிடங்கள் என்ற நிலை தற்போது 13 நிமிடங்களாக குறைந்துள்ளது.

ஐ.பி.செந்தில்குமார்:- 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்ததே தலைவர் கருணாநிதி ஆட்சியில்தான்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- 108 ஆம்புலன்ஸ் திட்டம் முதல் சுகாதாரத் துறையில் சிறந்த திட்டங்கள் அனைத்தையும் கொண்டுவந்தது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

ஐ.பி.செந்தில்குமார்:- ஆம்புலன்சில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நேரம் 12 மணியாக உள்ளது. அதை 8 மணி நேரமாக குறைத்து, 3 ஷிப்டுகள் முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு நடக்கிறது. அந்த தேர்வு முடிவில் தமிழகத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தேர்வு பெற்றவர்கள் எத்தனை பேர்?, தேர்வுக்கு முன்பாக இருந்த நிலை என்ன?.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் 4,500 உள்ளது. இதில், மத்திய அரசின் ஒதுக்கீடு 50 சதவீதம் போக, மீதமுள்ள 50 சதவீதமும் தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்குத்தான் வழங்கப்படுகிறது.

ஐ.பி.செந்தில்குமார்:- ‘நீட்’ தேர்வை தமிழ் வழியாக எழுதிய மாணவர்களுக்கு 69 கேள்விகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. எப்படி அந்த மாணவர்களால் தேர்ச்சி பெற முடியும். மேலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்க்காமல், தேர்ச்சி பெற்றவர்களில் எத்தனை பேருக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது என்று பார்க்க வேண்டும். இந்தியாவில் மொத்தம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் 63 ஆயிரம் உள்ளது. ஆனால், ‘நீட்’ தேர்வில் 7 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை, ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 80 சதவீதம் பேர் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்கள்.

அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- இந்த ஆண்டுதான் ‘நீட்’ தேர்வை சந்திக்கும் நிலை தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டது. அரசு சார்பில் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு 4 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. வேறு எந்த மாநிலத்திலும், ‘நீட்’ தேர்வுக்கு அரசே பயிற்சி அளித்திருக்கிறதா?.

ஐ.பி.செந்தில்குமார்:- உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்:- தேவைப்பட்டால், இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடவும் தயாராக உள்ளது. தேவையில்லாமல், உறுப்பு கொடையாளிகளின் குடும்பத்தினரையும், மருத்துவ நிபுணர்களையும் காயப்படுத்த வேண்டாம். இவ்வாறு விவாதம் நடந்தது.