18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடியும்? ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து


18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடியும்? ஓய்வுபெற்ற நீதிபதி கருத்து
x
தினத்தந்தி 14 Jun 2018 10:45 PM GMT (Updated: 14 Jun 2018 8:51 PM GMT)

வழக்கை விசாரித்து முடிப்பதற்கு கால அளவு எதுவும் இல்லாததால், 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கின் 3-வது நீதிபதியின் விசாரணை எப்போது முடிந்து தீர்ப்பு வரும் என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து தெரிவித்து உள்ளார்.

சென்னை,

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். சபாநாயகரின் உத்தரவில் தலையிட முடியாது என்று தலைமை நீதிபதியும், சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. அதனால் அந்த உத்தரவை ரத்து செய்கிறேன் என்று நீதிபதி எம்.சுந்தரும் தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதனால், இவர்களின் தீர்ப்பு எது சரியானது எது? என்பதை முடிவு செய்ய 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐகோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி டி.அரிபரந்தாமனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த வழக்கை விசாரிக்க போகும் 3-வது நீதிபதி யார்? என்பதை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் தீர்மானிப்பார். அந்த 3-வது நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பார்.

தலைமை நீதிபதி தீர்ப்பு சரியா?, நீதிபதி எம்.சுந்தர் தீர்ப்பு சரியா? என்பதை அனைத்து தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்மானிப்பார். அல்லது இருவரது தீர்ப்புக்கும் உடன்படாமல், 3-வது தீர்ப்பை பிறப்பிக்கலாம். இந்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வரவே 5 மாதங்களாகி விட்டதே? என்று பொதுமக்கள் கேட்கலாம்.

இந்த வழக்கை குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்று கால அளவு எல்லாம் நீதிபதிகளுக்கு கிடையாது. அதனால், 3-வது நீதிபதி தீர்ப்பு 6 நாட்களிலும் வரலாம். 6 மாதம் கழித்தும் வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேநேரம், 18 பேர் சார்பில் ஆஜரான வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன், இதுகுறித்து மூத்த நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷிடம் முறையிடுவோம் என்று கூறினார்.

‘இது மிகவும் முக்கியமான வழக்கு. 18 சட்டசபை தொகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலன் சம்பந்தப்பட்டது. எம்.எல்.ஏ.க்கள் இல்லாமல், அந்த மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகிறது. பாதிக்கப்படுகிறது. அதனால், 3-வது நீதிபதியின் விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்று காலம் நிர்ணயம் செய்து, உத்தரவு பிறப்பிக்கும்படி நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷிடம் கோரிக்கையை முன்வைப்போம்’ என்று ராஜாசெந்தூர்பாண்டியன் கூறினார்.

Next Story