மக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது


மக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது
x
தினத்தந்தி 14 Jun 2018 11:15 PM GMT (Updated: 14 Jun 2018 8:56 PM GMT)

நீதிமன்றத்தின் தயவினால் மக்கள் விரோத ஆட்சிக்கு 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

சென்னை,

அ.தி.மு.க.வை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதுதொடர்பாக அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகரிடம் கொடுத்த புகாரின் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந்தேதி சபாநாயகர் 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்தார்.

அதைத்தொடர்ந்து அவர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று பிற்பகல் 1 மணிக்கு மேல் வழங்கப்பட்டது. முன்னதாக நேற்று காலையில் இருந்தே சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினார்கள்.

முதலாவதாக வந்த பழனியப்பனை(பாப்பிரெட்டிபட்டி) தொடர்ந்து, தங்க தமிழ்ச்செல்வன்(ஆண்டிப்பட்டி), பி.வெற்றிவேல்(பெரம்பூர்), வி.செந்தில்பாலாஜி(அரவக்குறிச்சி), கே.கதிர்காமு(பெரியகுளம்), டி.ஏ.ஏழுமலை(பூந்தமல்லி), ஆர்.ஆர்.முருகன்(அரூர்), எஸ்.முத்தையா(பரமக்குடி), சோ.மாரியப்பன் கென்னடி(மானாமதுரை), என்.ஜி.பார்த்திபன்(சோளிங்கர்), மு.கோதண்டபாணி(திருப்போரூர்), ஆர்.சுந்தரராஜ்(ஒட்டப்பிடாரம்), எம்.ரெங்கசாமி(தஞ்சாவூர்), ஆர்.தங்கதுரை(நிலக்கோட்டை), ஆர்.பாலச்சுப்பிரமணி(ஆம்பூர்), எஸ்.ஜி.சுப்பிரமணியன்(சாத்தூர்), கே.உமா மகேஸ்வரி(விளாத்திகுளம்), சி.ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்) ஆகிய தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் வந்தனர்.

கோர்ட்டில் தீர்ப்பு சாதகமாக வரும் என்று எதிர்பார்த்து இருந்த அவர்களுக்கு எதிர்மாறாக தீர்ப்பு அமைந்தது. இதையடுத்து டி.டி.வி.தினகரன் தலைமையில் அவர்கள் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் கூறியதாவது.

18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூடவே இருக்கிறார்கள். அந்த 18 பேரும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தங்கள் பதவிகளை தியாகம் செய்தவர்கள். ஆளுங்கட்சியினருடன் அவர்கள் இருந்திருந்தால் நிறைய சலுகைகள் கிடைத்து இருக்கும்.

ஜெயலலிதாவின் கட்சி, சசிகலாவின் கையில் இருந்தால் தான் அடுத்த நூற்றாண்டுக்கும் செல்ல முடியும் என்றும், தொண்டர்களின் விருப்பத்தை ஏற்றும் 18 எம்.எல்.ஏ.க்கள் எங்கள் கூட இருக்கிறார்கள். தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் என்னுடைய 2 கண்கள் மாதிரி. கென்னடி என்னுடைய உடன்பிறந்த சகோதரர். டாக்டர் முத்தையா எனக்கு அண்ணன்.

18 எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் என்னை சந்திக்கவரவில்லை என்றால் அதை பெரிதுபடுத்தாதீர்கள். நானே போக சொன்னால் கூட என்னைவிட்டு அவர்கள் போகமாட்டார்கள். இதுதான் உண்மை. எந்த சோதனை வந்தாலும், சபாநாயகர் தீர்ப்பு வழங்கியது தான் செல்லும் என்று கோர்ட்டு சொல்லி இருந்தாலும் எங்கள் கூட தான் இருப்பார்கள். நாங்கள் அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு தயாராகிவருகிறோம். நாங்கள் போராளிகள்.

ஐகோர்ட்டில் ஒரு நீதிபதி சபாநாயகரின் தீர்ப்பு செல்லாது என்றும், தலைமை நீதிபதி சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும் சொல்கிறார்கள்.

இதே கோர்ட்டில் தான் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை நிராகரித்தார்கள். அது எனக்கு புரியவில்லை. புதுச்சேரி மாநிலத்துக்கு ஒரு சட்டம், தமிழகத்துக்கு ஒரு சட்டம் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். 2 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை எங்களுக்கு எதிராக தந்திருந்தாலும், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டு சென்று வென்று இருப்போம்.

நீதிமன்றத்தின் தயவினால் மக்கள் விரும்பாத, மக்கள் விரோத ஆட்சிக்கு 2 முதல் 3 மாதங்கள் ஆயுள் நீடித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு மீது மக்களுக்கு கேள்விக்குறி எழுகிறது. சாதாரண மனிதனாக எனக்கும் அதே சந்தேகம் இருக்கிறது.

இந்த தீர்ப்பு மூலம் எங்களுக்கு 50 சதவீதம் வெற்றி கிடைத்து இருக்கிறது. இந்த ஆட்சி போக வேண்டும் என்று நினைத்த மக்கள் தான் தோல்வி அடைந்துவிட்டார்கள். ஏனென்றால் இந்த ஆட்சியால் பாதிக்கப்படாத வர்க்கமே கிடையாது.

18 எம்.எல்.ஏ.க்களும் எடுக்கும் முடிவுக்கு நான் உடன்படுவேன். 3-வது நீதிபதியின் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக இருந்தால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சொல்வேன். ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்றால் தி.மு.க.வும் சேர்ந்துதானே வருவார்கள். அவர்களுடன் நான் இருக்கிறேன். ஆனால் இந்த 18 பேர் இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அது அவர்கள் முடிவு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது என்னுடைய ‘ஸ்லீப்பர் செல்ஸ்’ எல்லோரும் வெளிவருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story