ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் நவீனப்படுத்தப்படும்


ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் நவீனப்படுத்தப்படும்
x
தினத்தந்தி 14 Jun 2018 11:30 PM GMT (Updated: 14 Jun 2018 10:23 PM GMT)

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.2 கோடியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் நவீனப்படுத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் முடிந்ததும், இறுதியாக துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார். மொத்தம் 108 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் முக்கிய அம்சங்கள் வருமாறு.

* செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மற்றும் கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து சிகிச்சை மையங்கள் ரூ.28.3 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, விபத்து காய சிகிச்சை ஒப்புயர்வு மையமாக ரூ.8.55 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்.

* ‘தாய்’ திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 9 விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு 60 மருத்துவ அலுவலர்கள், 300 செவிலியர்கள் மற்றும் 342 இதர சுகாதார பணியாளர்கள் ரூ.5.91 கோடி செலவில் புதிதாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

* 12 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை மையங்களாகக் கொண்டு அவற்றைச் சார்ந்து 160 மருத்துவமனைகளில் மாரடைப்பு சிகிச்சைப் பிரிவுகள் ரூ.9.2 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.

* சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ‘தாய்’ திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் ரூ.2 கோடி செலவில் மேலும் நவீனப்படுத்தப்படும்.

* 834 துணை சுகாதார மையங்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள 140 நகர்ப்புற சுகாதார மையங்களில் மக்கள் தொகை மற்றும் சமூகம் சார்ந்த தொற்றா நோய்கள் கண்டறியும் நலத்திட்ட பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு ரூ.4.61 கோடி செலவில் ஊக்கத் தொகை வழங்கப்படும்.

* எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனை, கஸ்தூரிபாய்காந்தி தாய்-சேய் நல மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ஓட்டேரி மற்றும் சேத்துப்பட்டு காசநோய் மருத்துவமனைகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, காரப்பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் 6 அரசு மருத்துவமனைகளில் சி.டி.ஸ்கேன் கருவிகள் ரூ.13.5 கோடி செலவில் வழங்கப்படும்.

* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், கல்லீரல் பாதிப்பு விளிம்பு நிலை நோயாளிகளுக்கான ஸ்டெம் செல் சிகிச்சைக்கு, பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சிகள் ரூ.4.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். மேலும், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.13 லட்சம் செலவில் வைரல் ஹெபடைடிஸ் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.

* தமிழகத்தில் கொசுக்களால் பரவும் நோய்களான டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்தவும், நோய்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் ரூ.12.93 கோடி செலவில் கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின், கை அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு நிலையத்திற்கு சிறப்பு மருந்துகள் மற்றும் நவீன மருத்துவக் கருவிகள் ரூ.4.23 கோடி செலவில் வழங்கப்படும்.

* ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை முறைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆய்வகம், ரூ.6.63 கோடி செலவில் சி.ஜி.எம்.பி. தரத்திற்கு மேம்படுத்தப்படும்.

* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைத் துறையின் கை அறுவை சிகிச்சை ஆராய்ச்சி மற்றும் கை மாற்று அறுவை சிகிச்சை பிரிவிற்கு, அதிநவீன வசதிகளுடன் தனி அறுவை அரங்கமும், தனிப்பிரிவும் ரூ.4.79 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள சிறப்பு அடுக்குமாடி கட்டிடத்திற்கு கூடுதல் வசதிகள் ரூ.9.92 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் நலன் கருதி சாய்தள வசதிகள் ரூ.6.36 கோடி செலவில் ஏற்படுத்தப்படும்.

* சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, மகப்பேறு நோயியல் நிலையம் மற்றும் அரசு மகளிர் மற்றும் சிறார் நல மருத்துவமனைகளுக்கு புதிய தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு கருவிகள் ரூ.4.1 கோடி செலவில் வழங்கப்படும்.

* தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நவீன புறநோயாளிகள் பிரிவு ரூ.6 கோடி செலவில் அமைக்கப்படும்.

* எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், குழந்தைகளுக்கான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையம் ரூ.1.5 கோடி செலவில் அமைக்கப்படும்.

* சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை ராஜாஜி மருத்துவமனைகளில் மூன்றாம் பாலினர் சிகிச்சைக்கான சிறப்புப் பிரிவு ரூ.30 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story