சென்னையில் நடிகை கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் முற்றுகை


சென்னையில் நடிகை கஸ்தூரி வீட்டை திருநங்கைகள் முற்றுகை
x
தினத்தந்தி 16 Jun 2018 10:30 PM GMT (Updated: 16 Jun 2018 8:28 PM GMT)

18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சர்ச்சை கருத்து வெளியிட்ட நடிகை கஸ்தூரிக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை,

நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் அரசியல், சினிமா, சமூக பிரச்சினை தொடர்பாக பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அவருடைய கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது.

அந்த வகையில் 18 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திருநங்கைகளுடன் ஒப்பிட்டு கஸ்தூரி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து பதிவிட்டார். இதற்கு திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து கஸ்தூரி அந்த ‘டுவிட்டர்’ பதிவை உடனடியாக நீக்கினார். மன்னிப்பும் கோரினார்.

இந்தநிலையில் கஸ்தூரியை கண்டித்து சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனி 2-வது தெருவில் உள்ள அவருடைய இல்லத்தை சுமார் 20 திருநங்கைகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கஸ்தூரிக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. சில திருநங்கைகள் கையில் துடைப்பத்துடன் ஆவேசமாக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் போலீசார் திருநங்கைகளை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே கஸ்தூரி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர திருநங்கைகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருநங்கைகள் நல வாரிய உறுப்பினர் சுதா கூறியதாவது.

நடிகை கஸ்தூரி சுய விளம்பரத்துக்காக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள கருத்துகள் திருநங்கைகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் மிகவும் இழிவுபடுத்தி உள்ளது. எனவே அவர் மீது திங்கட்கிழமை(நாளை) சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story