டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: லாரிகள் இன்று முதல் ஓடாது


டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்: லாரிகள் இன்று முதல் ஓடாது
x
தினத்தந்தி 17 Jun 2018 11:15 PM GMT (Updated: 17 Jun 2018 8:36 PM GMT)

டீசல் விலை உயர்வை கண்டித்து இன்று முதல் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.சுகுமார் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

டீசல் விலை தினசரி உயர்வு, 3-வது நபர் காப்பீட்டு தொகை கட்டணம் 30 சதவீதம் அதிகரிப்பு, ஆண்டுதோறும் சுங்க கட்டணம் உயர்வு போன்ற காரணங்களால் லாரி தொழில் நலிவடைந்து வருகிறது. எனவே டீசல் விலையை தினசரி நிர்ணயிக்காமல் 3 மாதத்துக்கு ஒரு முறை நிர்ணயம் செய்ய வேண்டும். காப்பீட்டு தொகையை குறைக்க வேண்டும். சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏப்ரல் 24-ந் தேதி பிரதமர், பெட்ரோலிய துறை, சாலை போக்குவரத்து துறை மந்திரிகளுக்கு அகில இந்திய தரைவழி போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்த கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் ஜூன் 18-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. எனினும் மத்திய அரசு எங்களுடைய கோரிக்கைகளை செவி சாய்க்காததால் திட்டமிட்டபடி இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர உள்ளோம்.

நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் ஓடாது. சென்னையில் 5 லட்சம் லாரிகள் ஓடாது. வெளிமாநில லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அடுத்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், இன்று நடைபெறும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு எங்களுடைய ஆதரவு இல்லை. நாங்கள் ஜூலை 20-ந் தேதி நடைபெறும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்போம். எனவே இன்று அனைத்து லாரிகளும் இயங்கும் என்றார்.


Next Story