ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி


ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை தங்கதமிழ்செல்வன் பேட்டி
x
தினத்தந்தி 17 Jun 2018 11:45 PM GMT (Updated: 17 Jun 2018 8:49 PM GMT)

ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டுவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கைபரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றத்தின் மீது 100 சதவீத நம்பிக்கை உள்ளது என்று கூறிய நீங்கள் தற்போது வழக்கை வாபஸ் பெறுவது எதற்கு?

பதில்:-நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். எந்த தப்பும் செய்யாத எங்களுக்கு அநீதி கிடைக்கிறது. அரசுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு நீதி கிடைக்கிறது. இது மாறுபட்ட தீர்ப்பு. நீதிமன்றங்கள் மத்திய, மாநில அரசின் சொல்படிதான் செயல்படுகின்றன. நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆண்டிப்பட்டி தொகுதியில் மீண்டும் தேர்தல் நடத்தி ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்யுங்கள்.

கேள்வி:- ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மனம் திருந்தி வந்ததால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியது குறித்து?

பதில்:- துணை சபாநாயகராக அவரை நியமனம் செய்ததே தவறு. நல்ல திறமையானவர்களை மட்டுமே துணை சபாநாயகராக நியமிக்க வேண்டும். கட்சி தாவல் சட்டத்தில் மனம் திருந்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. மனம் திருந்தியதால் ஏற்றுக்கொள்கிறோம் என்றால் அவர் என்ன கடவுளா? பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கேள்வி:- தற்போது நீங்கள் எடுத்துள்ள முடிவு ஆண்டிப்பட்டி தொகுதி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

பதில்:- நான் இப்போது கூட ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சென்று வருகிறேன். என்னை கண்ட மக்கள் நீங்கள் எடுத்த முடிவு சரியானது என்று பாராட்டுகின்றனர். எங்களுக்கு உடனடியாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மக்கள் எத்தனை நாளைக்கு எம்.எல்.ஏ. இல்லாமல் இருப்பார்கள்? ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனவே அந்த பிரச்சினைகளை தீர்க்க கண்டிப்பாக ஒரு எம்.எல்.ஏ. வேண்டும். எனவே வேகமாக இடைத்தேர்தலை நடத்தி யாரையாவது ஒருவரை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்ய வேண்டும்.

கேள்வி:- தகுதிநீக்கம் செய்யப்பட்ட ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்கு தேர்தலில் போட்டியிட முடியாது என மூத்த வழக்கறிஞர் விஜயன் கூறியுள்ளாரே?

பதில்:- தற்போது உள்ள அரசின் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. எனவே ஆண்டிப்பட்டி தொகுதியில் நான் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை. எனவே என் தொகுதிக்கு ஒரு எம்.எல்.ஏ.வை தேர்வு செய்து கொடுங்கள்.

கேள்வி:- வழக்கை வாபஸ் வாங்கும் அறிவிப்பில் உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை?

பதில்:- வக்கீல்களிடம் ஆலோசனை நடத்திவிட்டு சொல்கிறேன்.

கேள்வி:- டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கும் நீங்கள் உள்பட 8 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வுக்கு மாற திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வருகிறதே?

பதில்:- இல்லை. அதெல்லாம் வெறும் வதந்தி. 18 பேரும் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பக்கமே இருக்கிறோம். நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது என்று கருதியதால், நான் தொடர்ந்த வழக்கை வாபஸ் செய்வதோடு, எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்ய முடிவு செய்தேன். இதுகுறித்து எங்கள் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனிடம் கூறிவிட்டு, அவர் ஒப்புதல் அளித்தவுடன்தான் இந்த நடவடிக்கையை நான் மேற்கொண்டேன். இவ்வாறு தங்கதமிழ்செல்வன் கூறினார்.

Next Story