மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் மொழி நீக்கம்: கூட்டாட்சி தத்துவத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் - கனிமொழி எம்.பி


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழ் மொழி நீக்கம்: கூட்டாட்சி தத்துவத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் - கனிமொழி எம்.பி
x
தினத்தந்தி 18 Jun 2018 10:12 AM GMT (Updated: 18 Jun 2018 10:12 AM GMT)

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து தமிழ்மொழி நீக்கம் குறித்து கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். #Kanimozhi

சென்னை,

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில் ஆரம்ப, உயர்நிலை வகுப்பு ஆசிரியர் பணிக்கு சி.டி.இ.டி. தேர்வு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

20 மொழிகளில் தேர்வு எழுதும் வசதி இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், பெங்காலி, குஜராத்தி என 17 மொழிகள் இப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்தி, ஆங்கிலம், சமஸ்கிருதம் மொழிகளில்தான் எழுத வேண்டும் என்று தகவல் வெளியாகியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், தி.மு.க-வின் மாநிலங்களைவை உறுப்பினராக உள்ள கனிமொழி இது குறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து தமிழ் உள்ளிட்ட 17 மாநில மொழிகளை நீக்க மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு, கூட்டாட்சி தத்துவத்துக்கு விடப்பட்டுள்ள நேரடி சவாலாகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழை தாய்மொழியாக கொண்டுள்ள சிபிஎஸ்இ மாணவர்கள், உரிய ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால் கடுமையான நெருக்கடிக்கு ஆளாவார்கள்.  இதன் காரணமாக, மாணவர்கள், இந்தி அல்லது சமஸ்கிருதத்தை மொழிப் பாடமாக தேர்ந்தெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

இது நாடெங்கிலும், மற்றொரு தீவிர மொழிப் போராட்டத்தை உருவாக்கும். இந்தி, இந்து, இந்துஸ்தான் என்ற பிஜேபியின் மோசமான திட்டத்தின் ஒரு பகுதியே இது’ என்று தெரிவித்துள்ளார்.


Next Story