சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது


சென்னையில் கல்லூரிகள் திறந்த முதல்நாளே விபரீதம்: பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 18 Jun 2018 10:00 PM GMT (Updated: 18 Jun 2018 8:38 PM GMT)

சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.

சென்னை, 

சென்னையில் நேற்று கல்லூரிகள் திறந்த முதல்நாளே மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். பட்டாக்கத்திகளுடன் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் நீண்ட முடியுடன் கல்லூரி வந்த மாணவர்களை பிடித்து அவர்களின் முடியை, போலீசார் அழகாக வெட்டி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.

சென்னையில் கோடை விடுமுறைக்கு பிறகு கலைக்கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதால், பஸ், ரெயில்களில் வரும் மாணவர்கள் கலாட்டா செய்யக்கூடும் என்பதை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் தலைமையில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

மாணவர்கள் பயணம் செய்யும், 202 மாநகர பஸ் வழித்தடங்களில் 75 மாணவர்கள் அடிக்கடி கலாட்டா செய்வது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த 75 மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்கள் மூலம், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கினால் எதிர்கால வாழ்க்கை பாதிக்கும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த அறிவுரைகள் எல்லாம் காற்றோடு காற்றாக கலந்து விட்டது. நேற்று கல்லூரி திறந்த முதல் நாள் அன்றே மாணவர்கள் தங்களது அட்டகாச விளையாட்டை தொடங்கினார்கள். பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்த பஸ்களை போலீசார் கண்காணித்தனர்.

திருவொற்றியூர் சுங்கச்சாவடியில் இருந்து 6-டி மாநகர பஸ், திருவான்மியூர் நோக்கி சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் மாநில கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். அந்த மாணவர்கள் பஸ்சில் பாட்டுப்பாடியபடி ஆட்டம் போட்டபடி வந்தனர்.

அவர்களை பஸ் டிரைவர் கண்டித்ததாக தெரிகிறது. உடனே டிரைவரோடு மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அந்த பஸ் கடற்கரை காமராஜர் சாலை, எழிலகம் அருகே வந்தபோது திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் தலைமையிலான போலீஸ் படையினர் பஸ்சை மடக்கி சோதனை போட்டனர்.

பஸ்சில் பயணித்த மாநில கல்லூரி மாணவர்களை மடக்கி பிடித்து பஸ்சை விட்டு கீழே இறக்கினார்கள். அவர்களிடம் சோதனை செய்தபோது அவர்கள் முதுகில் மாட்டியிருந்த பின்பக்க பையினுள் பட்டாக்கத்திகள் இருந்தன. பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். கத்தி வைத்திருந்த மாணவர்களும் பிடிபட்டனர்.

அந்த வழியாக வந்த 21 ஜி மாநகர பஸ்சிலும், போலீசார் சோதனை நடத்தினார்கள். இதேபோல் சென்டிரல் ரெயில்நிலையம் அருகே கும்பலாக வந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் சோதனை செய்தபோது, அவர்களிடமிருந்தும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. பட்டாக்கத்திகளை வைத்திருந்த மாணவர்களை போலீசார் பிடித்து சென்றனர்.

பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் வாசல்களிலும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். மாநில கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாசலில் பட்டாசு வெடித்தார்கள்.

இதேபோல ரெயில்களிலும் நேற்று போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாணவர்கள் பயணம் செய்யும் பஸ்களும், ரெயில்களும் கண்காணிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

சென்டிரல் ரெயில் நிலையம் அருகே பிடித்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும், முன்னாள் மாணவர்கள் மணிகண்டன், ஜெகன், பிரபாகரன் ஆகியோர் உள்பட 4 பேர் மட்டும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல எழிலகம் அருகே கத்தியுடன் பிடிபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஸ்களில் ஆடிப்பாடி வந்த ஏராளமான மாணவர்களையும் அண்ணாசதுக்கம் போலீசார் பிடித்து சென்றனர். பிடிபட்ட ஏராளமான மாணவர்கள் நீளமாக முடி வளர்த்திருந்தனர். அந்த மாணவர்களுக்கு போலீஸ் நிலையத்தில் வைத்தே, அவர்களது நீண்ட முடியை போலீசார் வெட்டினர்.

போலீசார் வெட்டியிருப்பதை போல மாணவர்கள் முடியை அழகாக வெட்டி ஒழுங்குபடுத்தி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டது. நேற்றைய சம்பவங்களில் கத்தி வைத்திருந்த மாணவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், மற்ற மாணவர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story