எங்கள் அணியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்துவிட்டால் நானும் வந்துவிடுகிறேன் தங்க தமிழ்செல்வன் சவால்


எங்கள் அணியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்துவிட்டால் நானும் வந்துவிடுகிறேன் தங்க தமிழ்செல்வன் சவால்
x
தினத்தந்தி 19 Jun 2018 11:13 PM GMT (Updated: 19 Jun 2018 11:13 PM GMT)

எங்கள் அணியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ.வை இழுத்துவிட்டால் நானும் வந்துவிடுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமிக்கு தங்க தமிழ்செல்வன் சவால் விடுத்தார்.

சென்னை, 

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இரு நீதிபதிகள் இருவிதமான தீர்ப்பு வழங்கியதால், 3-வது நீதிபதிக்கு வழக்கு சென்றது.

இந்நிலையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்ச்செல்வன் நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தார். ஆனால் மற்றவர்கள் தொடர்ந்து வழக்கை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தனர். இதுதொடர்பாக சென்னை அடையாறில் உள்ள டி.டி.வி.தினகரன் இல்லத்தில் நேற்று ஆலோசனை நடந்தது.

டி.டி.வி.தினகரன் இல்லத்துக்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களில் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல், செந்தில்பாலாஜி, பழனியப்பன், பாலசுப்பிரமணியன், மாரியப்பன் கென்னடி, பார்த்திபன், முத்தையா, ரங்கசாமி ஆகிய 9 பேரும், வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியனும் வந்திருந்தனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை பிற்பகல் 2.15 மணி வரை நீடித்தது. இதில் வழக்கு தொடர்பாக அடுத்தகட்டமாக என்ன செய்யலாம்? என்பது குறித்தும், தங்க தமிழ்ச்செல்வன் வழக்கை வாபஸ் பெற இருப்பதாக கூறியது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் வெளியே வந்த தங்க தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் 18 பேரும் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கு தண்டனை கொடுத்து இருக்கிறார்கள். அதை எதிர்த்து 17 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை தொடர்ந்து நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். நான் வழக்கை வாபஸ் பெறுகிறேன். இந்த முடிவை பின்னணியாக வைத்துக்கொண்டு ஆளும் அரசு, எதிர்க்கட்சி, உளவுத்துறை திரித்து பேசுகிறது.

நாங்கள் 18 பேரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒற்றுமையாக இருக்கிறோம். எங்களை எந்த சக்தியும் பிரிக்கமுடியாது. கோர்ட்டின் மீது நம்பிக்கை இல்லை என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. அது மக்களுக்கு தெரியவேண்டும் என்பதற்காக தான் வழக்கை வாபஸ் பெறுகிறேன். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு.

சசிகலாவால் நியமிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்ததால், அவரை பதவி விலக வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைத்தோம். அதில் இன்றளவும் உறுதியாக இருக்கிறோம்.

வழக்கை வாபஸ் பெறுவதால் என்னுடைய தொகுதியில் தேர்தல் நடக்கும் என்று நான் நம்புகிறேன். வக்கீல்களிடமும் கலந்துபேசி ஒரு நல்ல முடிவை விரைவில் எடுப்பேன்.

எங்கள் பக்கம் இருந்து ஒரு எம்.எல்.ஏ.வை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இழுத்துவிட்டால், நானும் அவர்கள் பக்கம் போய்விடுகிறேன். அதை செய்ய முடியவில்லை என்றால், அவர்கள் அனைவரும் எங்கள் பக்கம் வரவேண்டும். இந்த சவாலை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா?.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அடுத்த முறை ஆட்சி அமைக்கும். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தவிர எங்கள் அணிக்கு யார் வந்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து வெற்றிவேல் கூறும்போது, ‘அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா கொள்ளை அடித்த பணத்தை டி.டி.வி.தினகரன் எடுத்துச் சென்றுவிட்டார் என்று சொல்கிறார். ஜெயலலிதாவை கொள்ளை அடித்து பணம் சேர்த்தார் என்று சொல்கிறார். இவர் விளங்குவாரா? எங்களுடைய வழக்கு எதிர்காலத்தில் முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது. வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் அதுவரை காத்திருப்போம்’ என்றார். 

Next Story