தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றம்


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றம்
x
தினத்தந்தி 19 Jun 2018 11:45 PM GMT (Updated: 19 Jun 2018 11:16 PM GMT)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக புகார்கள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன்படி கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது. மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பி வெளியே கொண்டு வரப்பட்டது. அந்த பகுதியில் உள்ள எடை மேடையில் டேங்கர் லாரிகளில் எவ்வளவு அளவு கந்தக அமிலம் ஏற்றப்பட்டு உள்ளது என்று எடை பார்க்கப்பட்டது. ஒரு லாரிக்கு சராசரியாக 25 டன் கந்தக அமிலம் ஏற்றப்பட்டது.

பின்னர் டேங்கர் லாரிகளில் முழுவதும் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு, வெளியூர்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணி விடிய, விடிய நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 8 டேங்கர் லாரிகள் மூலம் 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணி பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

இந்த அமிலம் கோவை, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. (அதாவது கந்தக அமிலத்தை மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது).

இன்னும் 2 நாட்களில் ஆலையில் இருந்து முற்றிலும் கந்தக அமிலம் அகற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story