பெண்கள் வீட்டில் இருந்தபடி ‘ஆன்-லைன்’ மூலம் வியாபாரம் செய்வது எப்படி?


பெண்கள் வீட்டில் இருந்தபடி ‘ஆன்-லைன்’ மூலம் வியாபாரம் செய்வது எப்படி?
x
தினத்தந்தி 20 Jun 2018 10:00 PM GMT (Updated: 20 Jun 2018 9:16 PM GMT)

பெண்கள் வீட்டில் இருந்தபடி ‘ஆன்-லைன்’ மூலம் வியாபாரம் செய்வது எப்படி? என்பது குறித்து சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை, 

தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம்(வீவா) சார்பில் சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அலுவலகத்தில் மாதாந்திர கருத்தரங்கு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில், பெண்கள் வீட்டில் இருந்தபடியே ‘ஆன்-லைன்’ மூலம் முதலீடு இல்லாமல் வியாபாரம் செய்வது எப்படி? என்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இணையதள முகவரியை உருவாக்கி, அதன் மூலம் துணிமணிகள், அழகு கலைப்பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்வது எப்படி? மற்ற நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி அதனை கை மாற்றி லாபம் சம்பாதிப்பது எப்படி? அழகு கலை குறிப்புகள், சமையல் குறிப்புகளை ‘யு-டியூப்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருமானம் ஈட்டுவது எப்படி? போன்ற குறிப்புகளை தனியார் ‘ஆன்-லைன்’ விற்பனை நிறுவனத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் பழனி என்பவர் விளக்கினார்.

இந்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

எங்களுடைய சங்கம் 400 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்கி உள்ளது. 2023-ம் ஆண்டுக்குள் 1,000 பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதே எங்களுடைய லட்சியம் ஆகும்.

அடுத்த மாதம்(ஜூலை) 25 பெண்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வங்கி கடன் உதவியுடன் ஆவின் கடை உரிமையை பெற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

ஆகஸ்டு மாதம் 25 பெண்களுக்கு சென்னை முக்கிய இடங்களில் ‘காபி ஷாப்’ அமைத்து தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அடுத்த மாதாந்திர கருத்தரங்கு கூட்டம் கோவை மாநகரில் ஜூலை 20-ந் தேதி நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story