அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்


அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2018 7:02 AM GMT (Updated: 26 Jun 2018 7:02 AM GMT)

அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

சென்னை,

அணை பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது என கடந்த ஜூன் 13ந்தேதி தகவல் வெளியானது.  இதனை தொடர்ந்து அணைகள் பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், வரைவு மசோதா மாநில அரசுகளுக்கு தரப்படவில்லை. மாநில அரசின் உரிமையில் தலையிடும் வகையில் அணை பாதுகாப்பு மசோதா உள்ளது. எனவே, அணை பாதுகாப்பு மசோதாவை மறு ஆய்வு செய்து,  மாநில அரசுகளின் கருத்தை கேட்டறிந்த பிறகே மசோதாவை கட்டாயமாக்க வேண்டும்.  ஒருமித்த கருத்து ஏற்படும் வரை அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.

அணைகள் பாதுகாப்பு வரைவு மசோதாவின் அம்சங்களுக்கு முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். ஆனால், தமிழக அரசு எதிர்த்த அம்சங்கள் திருத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  தமிழக சட்டப்பேரவையில் தீர்மானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன் மொழிந்தார்.

இந்த தீர்மானத்தில் மாநிலங்களை கலந்து ஆலோசித்து ஒருமித்த கருத்து ஏற்பட்ட பின்னரே சட்டத்தை இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க பேரவையில் முதல் அமைச்சர் பழனிசாமி தீர்மானம் கொண்டு வந்தார்.  இதற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவு பெறப்பட்டது.  இதனை அடுத்து அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story