தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது


தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது
x
தினத்தந்தி 30 Jun 2018 11:19 PM GMT (Updated: 30 Jun 2018 11:19 PM GMT)

தமிழகத்தில் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று எடப்பாடியில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மல்லியகரை, கருப்பூர் புதிய கிளைகள் தொடக்க விழா, கருப்பூர் புதிய காவல் நிலையம் திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எடப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மதியம் நடந்தது.

விழாவில், தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 53 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற 13 பணிகளை திறந்து வைத்தும் பேசியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அத்தனை திட்டங்களும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற காரணங்களுக்காக தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குறைகளை கூறி வருகிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்க்க முடியவில்லை. இதனால் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

சேலம் மாநகர் மட்டுமின்றி தம்மம்பட்டி, ஆத்தூர், ஓமலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ரெயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது. மேலும், மாவட்ட சாலைகள் மட்டுமின்றி மாநில நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துவதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது. அதை பயன்படுத்தி நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

தமிழக விவசாயிகளின் நீண்டநாள் பிரச்சினையை தீர்க்கும் வகையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் சட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

இனிமேல் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீர் கிடைத்தே தீரும். அதன்மூலம் பல மாவட்ட மக்களின் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதோடு, பல லட்சம் ஏக்கரில் விவசாயிகளின் விளைநிலங்களின் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் இந்த ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Next Story