விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய எடப்பாடி பழனிசாமி


விபத்தில் காயமடைந்தவருக்கு உதவிய எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 2 July 2018 12:07 AM GMT (Updated: 2018-07-02T05:37:06+05:30)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் 90 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

சென்னை,

திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, திருமணத்தை நடத்தி வைத்ததுடன் மணமக்களை வாழ்த்தி பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும், கிருஷ்ணகிரியில் இருந்து சென்னைக்கு எடப்பாடி பழனிசாமி காரிலேயே புறப்பட்டார். கார் ஆம்பூர் அருகே வடசேரி என்னும் இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சாலையில் மினி லாரியும், மொபட்டும் மோதிய விபத்தில் ஒருவர் காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை, எடப்பாடி பழனிசாமி பார்த்தார். உடனே, தனது காரை நிறுத்தச்சொல்லி, இறங்கி சென்று காயமடைந்தவரின் அருகில் சென்று விசாரித்தார்.

உடனடியாக, தன்னுடன் வந்த ஆம்புலன்ஸ் வேனை கொண்டுவரச் செய்து, காயமடைந்தவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு விரைவாக அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மாவட்ட கலெக்டரிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிடுமாறு கூறினார்.

காயமடைந்தவர் ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றிச்செல்லப்படும் வரை அங்கேயே இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பின்னர், அங்கிருந்து சென்னை நோக்கி காரில் புறப்பட்டார். 

Next Story