ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி


ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் - சந்தீப் நந்தூரி
x

ஸ்டெர்லைட் ஆலையில் 30 நாட்களில் அமிலங்கள், மூலப் பொருட்கள் அகற்றப்படும் என சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #SandeepNanduri

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டையடுத்து கடந்த மே 28-ம் தேதி, இந்த ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆலையில் சல்பியூரிக் ஆசிட் சேமிப்புக் கொள்கலனில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து சல்பியூரிக் ஆசிட்டை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறுகையில், ``சல்பியூரிக் ஆசிட் கசிவைப் போல, மேலும், ஏதாவது ஆசிட் கசிவுகள் உள்ளதா? மற்ற சேமிப்புக்கலன்களின் இருப்பு நிலை, அதன் தன்மைகள் குறித்தும், சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி.,யின் ஓய்வு பெற்ற பேராசிரியர், அண்ணா பல்கலைக் கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி, தொழில்துறை ஆய்வாளர்கள், மாநகராட்சி ஆணையாளர், மின்வாரிய அதிகாரிகள் ஆகியோர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் ஆய்வில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பாஸ்பாரிக் அமிலம் மற்றும் மூலப் பொருட்களை பாதுகாப்பாக அகற்றும் பணி தொடங்கி உள்ளது. இதன் அடிப்படையில் இன்று முதல் 30 நாள்களுக்குள் மீதம் உள்ள ஆசிட் மற்றும் மூலப் பொருள்கள் வெளியேற்றப்படும். மேலும் ஜிப்சம் கூடுதலான அளவில் இருப்பு இருப்பதால், இதை வெளியேற்ற ஆலைத்தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டுள்ளது. ஆலைக்கு மின்சார இணைப்பு ஏற்கெனவே துண்டிக்கப்படுள்ளதால், ஜெனரேட்டர் உதவியுடன் இவற்றை பம்பிங் செய்து லாரிகள் மூலம் வெளியேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்றே இப்பணிகள் துவங்கியுள்ளன. மேலும் ஜிப்சத்தை அப்புறப்படுத்த மட்டும் தேவைப்பட்டால் கூடுதல் அவகாசம் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.


Next Story