சேலத்தில் 1,500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்


சேலத்தில் 1,500 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனை தேடும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 2 July 2018 11:28 PM GMT (Updated: 2018-07-03T04:58:23+05:30)

சேலத்தில் கனமழையால் 1,500 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மழையின் போது பயங்கர காற்று வீசியதால் சில இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாமல் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் விடிய, விடிய மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.

சேலம் களரம்பட்டி, பச்சப்பட்டி, அஸ்தம்பட்டி, பெரமனூர், சூரமங்கலம் சுப்பிரமணிய நகர், அம்மாபேட்டை, நாராயண நகர் என மாநகரின் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீருடன் கழிவுநீரும் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் விடிய, விடிய தூங்காமல் பொதுமக்கள் தவித்தனர். சிலருடைய வீட்டில் மழைநீரில் மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நனைந்தன.

சிவதாபுரம் ரெயில்வே தரைப்பாலத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றதால் இந்த பகுதியில் பஸ்கள் இயக்கப்படவில்லை. மேலும், மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் தத்தளித்து ஊர்ந்து சென்றன.

சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள திருமணிமுத்தாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால், கரையின் ஒரு பகுதி உடைந்தது. சேலம் அம்பேத்கர் நகரில் பெய்த கன மழையால் 4 வீடுகள் திடீரென இடிந்து விழுந்தன. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் எந்த சேதமும் ஏற்படவில்லை.

மேலும் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி சேலத்தில் களரம்பட்டி, நாராயண நகர், பஞ்சதாங்கி ஏரி, அம்மாபேட்டை மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

சேலம் நாராயண நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முகமது ஆஷாத் (வயது 16). எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் 3 பேருடன் சினிமா பார்த்துவிட்டு வீடு திரும்பினான். வீடு அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக ஓடையில் முகமது ஆஷாத் தவறி விழுந்தான். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. முகமது ஆஷாத் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் விரைந்து சென்று தேடி பார்த்தனர். சம்பவ இடத்துக்கு கிச்சிப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உடனே சென்று மாணவனை தேடினர். தண்ணீர் அதிகமாக சென்றதால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து மாணவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பின்னர் மாவட்ட கலெக்டர் ரோகிணி மாணவன் தவறி விழுந்த ஓடையை பார்வையிட்டார். இதையடுத்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவனின் வீட்டுக்கு சென்ற கலெக்டர் ரோகிணி முகமது ஆஷாத்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

இதையடுத்து கலெக்டர் ரோகிணி அங்கிருந்து புறப்பட்டபோது அவரது காரை சிலர் முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் உயர் அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தினர்.

சேலத்தில் அதிகபட்சமாக 133.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கடந்த 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ந் தேதி சேலத்தில் 125.5 மில்லி மீட்டர் பதிவானதே அதிகமாக இருந்தது. 56 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் தற்போது ஒரே நாளில் அதிகபட்சமாக மழை பெய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நேற்று இரவும் சேலத்தில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. தொடர்ந்து 2-வது நாளாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். 

Next Story