சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதையை அமைக்க நிபுணர் குழு தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதையை அமைக்க நிபுணர் குழு தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 July 2018 11:33 PM GMT (Updated: 2018-07-03T05:03:43+05:30)

சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு மாற்று பாதையை அமைக்க நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தஞ்சாவூர்,

திருச்சி அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழாவை தஞ்சாவூரில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்திவைத்தார். விழாவில் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:-

திருமண விழாவில் வரவேற்புரை ஆற்றிய உதயநிதி அவருக்கு வழங்கப்பட்ட தலைமைப் பொறுப்பை நான் பறித்துக் கொண்டதாக ஒரு ஏக்கத்தோடு பெருமூச்சோடு இங்கே தெரிவித்திருக்கிறார்.

எனக்கு என்று வழங்கப்பட்டிருக்கக்கூடிய தலைமைப் பொறுப்பு யாராலும் தட்டிப் பறிக்க முடியாது, அதுவும் அன்பில் தர்மலிங்கம் இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி என்று சொல்லுகிற போது தி.மு.க. தலைவர் கருணாநிதி தான் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தலைமைப் பொறுப்பை ஏற்பது உண்டு.

ஆனால், அவருக்கு உடல் நலிவுற்று இருக்கக்கூடிய காரணத்தால் அவர் வர இயலாத அந்தச் சூழ்நிலையிலே தான், தொடர்ந்து அண்மைக் காலமாக நடைபெறக்கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் தலைமை பொறுப்பேற்கக்கூடிய வாய்ப்பை தொடர்ந்து பெற்று வருகிறேன்.

நான் வெளிநாடு செல்ல வேண்டிய அவசியத்திலே இருந்து அதற்காக அன்பில் தர்மலிங்கம் குடும்பத்தை சார்ந்தவர்கள் நான் வர இயலாத காரணத்தால் தான் உதயநிதியின் பெயரை தலைமைப் பொறுப்பிலே இணைத்து நடத்துவதாக முடிவு செய்திருந்தார்கள்.

ஆனால், நான் மேற்கொள்ளவிருந்த அந்தப் பயணத்தை கொஞ்சம் ஒத்திவைத்து விட்டு, நான் தான் இந்த இல்லத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வரவேண்டும். தலைமை ஏற்க வேண்டுமென்ற அந்த உணர்வோடு, அந்த உரிமையோடு, நான் வந்திருக்கிறேன்.

அதனால் தான் உதயநிதி தவறாக கருதிட வேண்டாம் தட்டிப் பறிக்கவில்லை, நீ வரவேற்புரை எப்படி தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருந்தாயோ அதுபோல் தொடர்ந்து நீதான் வரவேற்புரையாற்ற வேண்டும் என்கிற அந்த எண்ணத்தோடு தான் நானும் இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறேன்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு திருமண நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு அவர் பேசுகிற நேரத்தில் என்னை சுட்டிகாட்டி பேசியிருக்கிறார். அவர் பேசுகிற போது செயல்படாத தலைவருக்கு, பெயர் செயல் தலைவர் என்று என்னை விமர்சித்துப் பேசியிருக்கிறார். நான் கவலைப்படவில்லை.

ஆனால், செயல்படாத என்று சொன்ன வாதத்திற்காக சொல்கிறேன், செயல்படாத தலைவராக இருக்கலாம், ஆனால், எடுபிடி முதல்- அமைச்சராக இருக்கக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம்.

இன்றைக்கு சேலத்தில் இருந்து சென்னை வரையிலே ஒரு திட்டத்தை அறிவித்து, அந்த திட்டத்தை நிறைவேற்றுவதிலே நான் குறுக்கே நிற்கின்றேன் என்று யாரும் எண்ணிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

சேது சமுத்திர திட்டத்திற்கு மாற்றுப்பாதையை இன்றைக்கு நடத்தக்கூடிய ஒரு சூழலை நீதிமன்றமே தந்திருக்கிறது என்று சொன்னால், இந்த எட்டு வழிச்சாலைக்கு ஒரு மாற்று வழி பாதையை அமைக்க ஒரு நிபுணர் குழு அமைக்க வேண்டும்.

அதன் மூலமாக ஒரு மாற்று வழிப்பாதையை கண்டுபிடித்து அதை நிறைவேற்றுங்கள் என்று தான் இன்றைக்கு நாம் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

மத்திய மந்திரியாக இருந்த டி.ஆர்.பாலு சாலை போடவில்லையா?. அப்போது எல்லாம் கமிஷன் வாங்கிக்கொண்டு தான் சாலை போட்டாரா? என்று வெளிப்படையாக கேட்கிறார். அப்படி போடப்பட்டிருப்பது உண்மை என்று சொன்னால், அப்படி தவறாக நடந்திருக்கிறது என்று கருதினால், டி.ஆர்.பாலு மீது வழக்கு போடுங்கள் அதை சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு பொறுப்பேற்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வளவு லஞ்சம் வாங்கி இருக்கிறீங்க? எவ்வளவு கமிஷன் வாங்கியிருக்கிறீங்க? எங்கெங்கே மாமூல் வாங்கியிருக்கிறீங்க என்பது ஆதாரத்தோடு விஜிலென்ஸ் கமிஷனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

விரைவிலே, நீதிமன்றத்திற்கு செல்லப்போகிறது, அதையும் தாண்டி விரைவிலே தமிழ்நாட்டிலே தி.மு.க.வின் ஆட்சி உருவாகப்போகிறது. அப்படி உருவாகப்போகிற நேரத்திலே யார் யாரெல்லாம் சிறையிலே போய் இருக்கப்போகிறீர்கள் என்ற உண்மை வெளிவரத்தான் போகிறது.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story