தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது? அரசியல் கட்சிகளுக்கு, ஐகோர்ட்டு கேள்வி


தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது? அரசியல் கட்சிகளுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 3 July 2018 10:45 PM GMT (Updated: 2018-07-04T01:40:13+05:30)

ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், படிப்பில் சிறந்து விளங்கும் தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மாணவர்கள் சேர்க்கையின்போது பிற மாநில மாணவர்கள், தமிழகத்தில் வசிப்பதாக போலி இருப்பிடச்சான்று பெற்று, சேர்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன’ என்று சென்னை ஐகோர்ட்டில் மாணவி விஞ்னயா உள்பட 7 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை பெற்றுள்ள மாணவர்கள், அண்டை மாநிலங்களிலும் விண்ணப்பித்துள்ளனரா என்ற விவரத்தை சரிபார்த்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கார்டு நகலை அவசியம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் ஆயிரத்து 250 மாணவர்கள் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் எத்தனை பேர் பிற மாநிலங்களிலும் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்? என்பது தெரியவில்லை. இரட்டை இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் தமிழக மாணவர்களின் உரிமை பறி போகிறது. எனவே, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் தமிழக மருத்துவ கல்லூரிகளில் படிக்கின்றனர்? என்ற விவரத்தை மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.

அப்போது மனுதாரர் வக்கீல், ‘ஒருபக்கம் நீட் தேர்வில் தோல்வி அடைந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மறுபக்கம் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர்’ என்று கூறினார்.

இதற்கு நீதிபதி, தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுதாபம் தெரிவிக்கின்றன. மருத்துவ படிப்பில் சேரும் ஏழை மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். அதனால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக படிப்பில் சிறந்து விளங்கும் தலா 10 ஏழை மருத்துவ மாணவர்களின் கல்விச் செலவை ஏன் ஏற்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். பின்னர் விசாரணையை வருகிற 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். 

Next Story