கைலாய யாத்திரை: “உணவின்றியும், ஆக்சிஜன் பாதிப்பாலும் தவித்து வருகிறோம்” முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி கவலை


கைலாய யாத்திரை: “உணவின்றியும், ஆக்சிஜன் பாதிப்பாலும் தவித்து வருகிறோம்” முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி கவலை
x
தினத்தந்தி 3 July 2018 11:45 PM GMT (Updated: 2018-07-04T02:11:49+05:30)

கைலாய யாத்திரை வந்த இடத்தில் உண்ண உணவின்றியும், ஆக்சிஜன் பாதிப்பாலும் தவித்து வருகிறோம், என்று முன்னாள் எம்.எல்.ஏ. காயத்ரி தேவி கூறியுள்ளார்.

சென்னை, 

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கைலாய யாத்திரை மேற்கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மானசரோவர் அருகே உள்ள ஹில்சா மற்றும் சிமிகோட் பகுதிகளில் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக நடந்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில் சிக்கி தவிக்கும் தமிழர்களில் காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் காயத்ரி தேவியும் ஒருவர் ஆவார்.

இதுகுறித்து டாக்டர் காயத்ரி தேவி தொலைபேசி வாயிலாக நிருபர்களிடம் கூறியதாவது:-

விமான நிலையம் முடங்கியது

கடந்த மாதம் 28-ந் தேதி பவுர்ணமி தினத்தன்று சென்னையில் இருந்து 21 பேர் அடங்கிய குழுவாக கைலாய யாத்திரைக்கு புறப்பட்டோம். இதேபோல சுமார் 1,300 இந்தியர்கள் கைலாய யாத்திரைக்காக நேபாளம் வந்துள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் சுமார் 300 பேர் இருப்பார்கள். இங்கு கனமழை பெய்து வருகிறது. கடுங்குளிரும் நிலவுகிறது.

கனமழை காரணமாக நேபாள விமான நிலையம் முடங்கி உள்ளது. இதனால் ஆங்காங்கே யாத்திரைக்கு வந்தவர்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் மானசரோர் அருகே இருக்கிறோம். இங்கு எல்லாமே சிறிய அளவிலான பகுதிகள் தான். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. 100 பேர் மட்டுமே இருக்கவேண்டிய இடத்தில் தற்போது 400-க்கும் அதிகமானோர் நெரிசலுடன் அடைக்கலமாக இருக்கிறோம். இன்னும் பலர் நாங்கள் இருக்கும் இடத்துக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது? என்று குழப்பமாக இருக்கிறது. இதுகூட பரவாயில்லை. சிமிகோட் பகுதியில் உட்கார கூட இடம் இல்லாத அளவுக்கு, இந்தியர்கள் தவித்து கொண்டிருக்கிறார்கள்.

ஆக்சிஜன் அளவு குறைவு

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி பிரணவ் கணேஷ் என்பவரை தொடர்புகொண்டு, எப்போது நிலைமை சரியாகும்? என்று கேட்டேன். ‘வானிலை மற்றும் காலநிலையை நாம் கணிக்கவே முடியாது. கனமழை எப்போது ஓயும் என்றும் சொல்லமுடியாது. எனவே தற்போது இருக்கும் இடத்திலேயே பத்திரமாக இருங்கள். எங்களால் முடிந்த எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்’, என்று அதிகாரி கூறியிருக்கிறார்.

கைலாய யாத்திரைக்கு வந்தவர்களில் 60 வயதை கடந்தவர்கள் அதிகம். அதில் 50 சதவீதம் பெண்களே. உறைவிடம் இல்லாமல் பெண்கள் மிகவும் தவிக்கிறார்கள். தவிர நாங்கள் இருக்கும் இடம் குளிர் நிறைந்த அதிக உயரமான பகுதியாகும். எனவே இங்கு ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கிறது. உரிய மருத்துவ உதவிகள் இல்லாமலும், உணவு கிடைக்காமலும் நாங்கள் அனைவரும் தவித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story