கேரள தோட்ட தொழிலாளியை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து சென்னை மாணவர்களுக்கும் பாராட்டு


கேரள தோட்ட தொழிலாளியை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து சென்னை மாணவர்களுக்கும் பாராட்டு
x
தினத்தந்தி 3 July 2018 10:00 PM GMT (Updated: 3 July 2018 8:58 PM GMT)

சமூக வலைதளத்தில் வைரலான பாடலை பாடிய கேரள மாநில ரப்பர் தோட்ட தொழிலாளியை நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை,

தொழிலாளி ஒருவர் ரப்பர் தோட்டத்தில் அமர்ந்தவாறு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விஸ்வரூபம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னை காணாது நான் இன்று நான் இல்லையே’ என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

படத்தில் அந்த பாடலை கமல்ஹாசனும், பாடகர் சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருப்பார்கள். தொழிலாளியின் பாடல் காட்சியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பார்த்தார். இதனை ரசித்து பார்த்த கமல்ஹாசன், அந்த வீடியோவை சங்கர் மகாதேவனுக்கும் அனுப்பிவைத்தார். அந்த பாடலை பாடிய தொழிலாளியை கமல்ஹாசன் தேடியபோது அவர் கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் உன்னி என்பது தெரியவந்தது.

இதையடுத்து ராகேஷ் உன்னியை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு நேரில் அழைத்து கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் எடுக்கப்படும் அடுத்த படத்தில் பாடுவதற்கான வாய்ப்பு தருவதாகவும் உறுதி அளித்தார். இதனை கேட்டு ராகேஷ் உன்னி மகிழ்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராகேஷ் உன்னி பாடிய வீடியோவை வாட்ஸ்அப்பில் பார்த்தேன். அதை கேட்டு மயங்கி சங்கர் மகாதேவனுக்கு அனுப்பிவைத்தேன். அவரும் வியந்தார். மரம் சுமக்கும் தொழிலாளியான ராகேசுக்கு கிடைக்க வேண்டிய புகழ் இன்னும் கிடைக்கவில்லை. பயிற்சி இல்லாமல் இப்படி திறமையாக, அற்புதமாக பாடுகிறார். இதுபோன்ற கலைஞர்கள் இந்தியாவின் எந்த மூலையில் இருந்தாலும் பாராட்டப்பட வேண்டும்.

அது தெற்கு மூலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் பெருமை. இந்தியா முழுவதிலும் இதுபோன்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். அறிஞர்களும் இருப்பார்கள் என்பதுதான் என் நம்பிக்கை. கிடைக்கும்போதெல்லாம் இதை கொண்டாட வேண்டியது நமது கடமை. தமிழகத்தில் இதுபோன்ற திறமைகள் எங்கெல்லாம் கொட்டிக் கிடக்கிறது? என்று தெரியாது. அதை வெளிச்சம்போட்டு காட்டவேண்டியது நமது பொறுப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல ரூ.15 ஆயிரம் செலவில் ‘ஜெய்ஹிந்த் 15’ என்ற இலகுரக செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்த சென்னையை சேர்ந்த மாணவர்கள் அமர்நாத், சுதிர், ஹரிகிருஷ்ணா, கிரி பிரசாத் மற்றும் அவர்களுடைய வழிகாட்டி தினேஷ் ஆகியோரும் மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனை நேற்று சந்தித்தனர்.

அப்போது, குறைவான செலவில் இந்த செயற்கைகோள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் வானிலை தொடர்பான தகவல்களை விரைவாக அறியமுடியும் என்பது உள்ளிட்ட அதன் பயன்களை மாணவர்கள் கமல்ஹாசனிடம் எடுத்துக்கூறினர். கமல்ஹாசன் அந்த குழுவினரை வெகுவாக பாராட்டியதுடன், இதேபோல வருங்காலங்களில் மேலும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார். 

Next Story