படுக்கை, கழிவறை வசதியுடன் அரசு சொகுசு பஸ்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்


படுக்கை, கழிவறை வசதியுடன் அரசு சொகுசு பஸ்கள் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 July 2018 11:15 PM GMT (Updated: 2018-07-04T03:23:54+05:30)

படுக்கை, கழிவறை வசதிகளுடன் கூடிய குளிர்சாதன அரசு சொகுசு பஸ்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்காக, அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 21 ஆயிரத்து 744 பஸ்களை, நாள்தோறும் 87.22 லட்சம் கி.மீ. தூரத்திற்கு இயக்கி வருகிறது. சுமார் 1 கோடியே 80 லட்சம் பயணிகள், தமிழ்நாடு மட்டுமின்றி, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களுக்கும் பஸ் சேவையின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

புதிய பஸ்கள் மற்றும் வழித்தடங்களை தொடங்கி வைத்தல், புதிய பணிமனைகள், அலுவலக கட்டிடங்கள், கோட்டங்கள் கட்டுதல், போக்குவரத்து தொழிலாளர்களின் நலன் கருதி தரம் மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள் கட்டுதல், இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு வசதி, பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண அட்டைகள், சென்னை மாநகரில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ்பயண அட்டைகள் போன்ற பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு (சென்னை) 40 பஸ்களும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 60 பஸ்களும், சேலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 78 பஸ்களும், கோவை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 172 பஸ்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதேபோன்று, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு 64 பஸ்களும், மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு 32 பஸ்களும், திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்திற்கு 69 பஸ்களும் என ரூ.134 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலான 515 புதிய பஸ்களை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த புதிய பஸ்களில், அரசு விரைவு போக்குவரத்து கழக வரலாற்றில் முதன் முறையாக, குளிர்சாதன வசதி படுக்கையுடன் கூடிய நவீன சொகுசு பஸ்கள், படுக்கை வசதி மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பஸ்கள், கழிவறை வசதியுடன் கூடிய நவீன சொகுசு பஸ்கள் ஆகிய பஸ்களும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் இயக்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், போக்குவரத்துத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.டபிள்யூ.சி.டேவிதார், அரசு போக்குவரத்து கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story