ஜெயலலிதாவை மருத்துவ மேல்சிகிச்சைக்கு விடாமல் சசிகலா குடும்பத்தினர் அரண் அமைத்து தடுத்தனர் அ.தி.மு.க. பகிரங்க குற்றச்சாட்டு


ஜெயலலிதாவை மருத்துவ மேல்சிகிச்சைக்கு விடாமல் சசிகலா குடும்பத்தினர் அரண் அமைத்து தடுத்தனர் அ.தி.மு.க. பகிரங்க குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 July 2018 9:31 PM GMT (Updated: 2018-07-05T03:01:13+05:30)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவ மேல்சிகிச்சைக்கு விடாமல் சசிகலா குடும்பத்தினர் அரண் அமைத்து தடுத்ததாக அ.தி.மு.க. நாளிதழில் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை, 

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மருத்துவ மேல்சிகிச்சைக்கு விடாமல் சசிகலா குடும்பத்தினர் அரண் அமைத்து தடுத்ததாக அ.தி.மு.க. நாளிதழில் பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. பத்திரிகையான ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ நாளிதழில் வெளியிடப்பட்டு இருப்பதாவது:-

அறிவிப்புக்கு முன் அறுவடை

அன்னமிட்டு வளர்த்த இயக்கத்துக்கு கன்னமிட்டு கொழுத்த கும்பல் ஆற்றிய தொண்டு தான் என்ன? எம்.ஜி.ஆரால் மலர்ந்த மாசற்ற இயக்கத்துக்கு மாபியா கும்பல் செய்திட்ட மகத்தான சேவை தான் என்ன? பதவிகள் தருவதாக பணப்பறிப்பு. பணம் தர மறுப்போருக்கு பதவி பறிப்பு.

வேட்பாளர் தேர்வுக்கு கையூட்டு. வேட்பாளருக்கு கொடுக்கும் பணத்தில் கை வைப்பு. புகாருக்கு உள்ளானவரை புனிதராக்க ஒரு ரேட்டு. ஜெயலலிதாவின் பார்வைக்கு ஒருவரை கொண்டு சேர்க்க தனி ரேட்டு. ஜெயலலிதா தேர்வு செய்வதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தாங்கள் பரிந்துரை செய்ததாக அறிவிப்பு வரும் முன்னே அறுவடை நடத்துவது.

அதிகாரத்தை உறிஞ்சி கொழுத்தது

ஜெயலலிதா விரும்புவோர் மீது அடுக்காத பழிபோட்டு அழித்தும் ஒழிப்பது. கப்பம் கட்டுவோரை அடைகாத்து நிற்பது. அனுசரிக்க மறுப்போரை கட்டம் கட்டி அழிப்பது. மண்ணுளி பாம்புகளாய் மறைந்திருந்து திருடியதை வெள்ளையாக்க மதுபான ஆலைகள் நடத்துவது.

மக்கள் செல்வத்தை திருடித்தான் கொழுத்தோம் என்பதை ‘மக்கள் செல்வர்’ என வெட்கமின்றி பட்டமிட்டு வெளிப்படையாய் சிரிப்பது. ஜெயலலிதாவின் அதிகாரத்தை உறிஞ்சி கொழுத்தது. ஒரு நூறு தலைமுறைக்கும் எங்களிடம் ஏழை இல்லை என்பதை ஜாஸ் சினிமா வழியே சகலருக்கும் உரைப்பது.

மேல் சிகிச்சைக்கு விடாமல் தடுப்பு

மருத்துவமனையில் ஜெயலலிதாவை வைத்து மர்மக் கதை புனைந்தது. மருத்துவ மேல் சிகிச்சைக்கு விடாமல் அரண் அமைத்து தடுத்தது. முடியும் வரை காத்திருந்து தாங்கள் முடிசூடிக் கொள்வதற்கு முகூர்த்தம் குறித்தது. கட்சி-ஆட்சியை கைப்பற்ற அதிகார வெறிபிடித்து அலைந்தது. இப்படி, வாரிக் கொடுத்த வள்ளல்களின் இயக்கத்துக்கு வழிப்பறி கும்பல் செய்ததெல்லாம் திருட்டும், புரட்டும், மிரட்டும், சுருட்டும் தானே!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story