தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தகவல்


தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் தகவல்
x
தினத்தந்தி 6 July 2018 4:30 AM IST (Updated: 6 July 2018 2:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தின் கடன் விகிதம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று சட்டசபையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் கே.என். நேரு (திருச்சி மேற்கு தொகுதி) பேசினார். அப்போது அவர், “தமிழக அரசின் கடன் அளவு ரூ.3.12 லட்சம் கோடியாக உள்ளது. அதாவது, 263.47 சதவீதமாக கடன் அளவு உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் அளவை பார்த்தால் தொடர்ந்து அரசை நடத்த முடியுமா? என்று எண்ணத்தோன்றுகிறது. இந்த நிலையில், தினமும் திட்டங்களை அறிவிக்கிறீர்கள். இதற்கு எங்கிருந்து பணம் வருகிறது” என்றார்.

அதற்கு பதிலளித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

உலக அளவில் பல்வேறு நாடுகளும், மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆண்டு தோறும் கடன் பெறுவதும், பெற்ற கடன்களை அரசுப் பணிகளுக்கு பயன்படுத்துவதும் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். இந்த நடப்பாண்டு இறுதியில் நிலுவைக் கடன் ரூ.3.12 லட்சம் கோடியாகவும், 2018-2019-ம் ஆண்டின் இறுதியில் ரூ.3.56 லட்சம் கோடியாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் கடன் பெறுவதில் நிகரக் கடன் அளவு உயர்ந்து வந்தாலும், பொருளாதார உற்பத்தி மதிப்பும் உயர்ந்து வருவதால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் கடன் அளவின் விகிதாச்சாரமே கடன் அளவை சரியாகக் குறிப்பிடும் அளவுகோலாகும். ஏனெனில், ஆண்டுதோறும் பொருளாதார உற்பத்தி மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், கடனை திரும்ப செலுத்துவதற்கான அரசின் திறனும் அதிகரித்த வண்ணம் இருக்கும்.

எனவேதான், மத்திய நிதிக் குழு, கடனை பொறுத்தவரை, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 25 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்ற ஒரு வழிமுறையை வகுத்து தந்துள்ளது. இந்த விகிதாச்சாரம் தமிழ்நாட்டை பொறுத்த அளவில், 2018-2019-ம் ஆண்டு வரவு - செலவு திட்ட மதிப்பீடுகளில் 22.29 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார சூழ்நிலையில் நல்லமாற்றம் ஏற்பட்டுவரும் நிலையில் வருவாய் வரவினங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்து பெறப்படும் கடன் அளவு எதிர்காலத்தில் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், நிதிப் பற்றாக்குறையும், நிலுவைக் கடனும் ரூபாய் மதிப்பின் அளவில் அதிகரித்தாலும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் நிதிப் பற்றாக்குறை விகிதமும், நிலுவைக்கடன் விகிதமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்பதையும், கடனுக்குரிய வட்டியை செலுத்துவதற்குரிய தகுதிநிலையையும் நாம் பெற்றிருக்கிறோம் என்பதனையும், இதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய திட்டங்களை தொடங்குவதால் உற்பத்தி பெருகும். உற்பத்தி பெருகினால் வருவாய் பெருகும். அதன் மூலம் கடன் அளவு சீர்செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story