வேலை நாட்களில் ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை


வேலை நாட்களில் ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை  கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 5 July 2018 11:45 PM GMT (Updated: 2018-07-06T04:07:18+05:30)

வேலை நாட்களில் ‘நீட்’ பயிற்சி வகுப்புகள் நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் தனியார் பள்ளிகள் (ஒழுங்குபடுத்துதல்) சட்ட மசோதாவை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தாக்கல் செய்து, அதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த மசோதாவின் மீது தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு சில விளக்கங்களை கேட்டார். அப்போது அவர், கற்பித்தல், கற்றல் என்ற அளவில்தான் பள்ளிகள் இருக்க வேண்டுமே தவிர, பயிற்சி மையங்களாக இருந்துவிடக்கூடாது. அங்கு கற்றல், கற்பித்தலை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முன்பு போல் அல்லாமல் தமிழக அரசின் அங்கீகாரத்தை பெறும் அவசியம் ஏற்பட்டுள்ளதா என்பதை விளக்க வேண்டும் என்று கோரினார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அளித்த பதில் வருமாறு:-

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ளதுபோல விடுமுறை நாட்களில் நீட் தேர்வுக்கான பயிற்சிகளை தனியார் பள்ளிகள் வழங்கலாம். ஆனால் வேலை நாட்களில் இந்த பயிற்சிகளை வழங்கக் கூடாது.

இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. வாரத்தின் 5 வேலை நாட்களில் பயிற்சிகளை நடத்தினால் அந்த பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளைப் பொறுத்த அளவில், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில அரசின் தடையில்லா சான்றிதழை பெறவேண்டும். அந்த பள்ளிகளையும் அரசு கண்காணிக்கும். வேலை நாட்களில் நீட் பயிற்சி நடத்தினால் அந்தப் பள்ளிகளின் தடையில்லா சான்றிதழ் திரும்பப் பெறப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து தனியார் சட்டக்கல்லூரிகள் நிறுவுதல் (ஒழுங்குபடுத்துதல்) சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்து, அதை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அந்த மசோதாவுக்கு தி.மு.க. சார்பில் எதிர்ப்பு தெரிவித்து எம்.எல்.ஏ. மதிவாணன் பேசினார். அவர், தனியார் சட்டக் கல்லூரிகளுக்கு சலுகையாக தரும் நிதியை வைத்து அரசே சட்டக் கல்லூரிகளை நடத்தலாம்.

அதன்படி, சட்டக் கல்லூரி இல்லாத இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகளை தொடங்க வேண்டும். போலி வக்கீல்கள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சி.வி.சண்முகம், சட்டக் கல்லூரிகளை தனியார் தொடங்குவதை தடுக்க முடியாது என்ற நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் புற்றீசல் போல் அவை வந்துவிடக்கூடாது என்பதற்காக அதை முறைப்படுத்தும் சட்ட மசோதா இது என்று குறிப்பிட்டார்.

பின்னர் அந்த சட்ட மசோதாக்கள், எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. 

Next Story