நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு


நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு
x
தினத்தந்தி 6 July 2018 10:24 AM GMT (Updated: 6 July 2018 10:24 AM GMT)

நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதப்பட்டு உள்ளது. #AIADMK

சென்னை

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.

வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

பா.ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும்.

டெல்லியில் சட்ட ஆணையம் நாளை நடத்தும் கருத்துக்கேட்பு ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றம், சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சட்ட ஆணையத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

நிலையான ஆட்சியை தரவேண்டும் என்பதற்காக 2016-ல் அதிமுகவுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். தமிழக சட்டசபையின் ஆயுட்காலம் 2021-ல் நிறைவடைகிறது. தேர்தல் சமயத்தில் நிறைவேற்றுவதாக பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்துள்ளோம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றினாலும், இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. சட்டமன்றத்தின் ஆயுட்காலத்தை குறைப்பதால் மக்கள் விரும்பிய நிலையான ஆட்சி பாதிக்கப்படும். ஒரே சமயத்தில் தேர்தல் என்ற திட்டத்தால் தமிழக சட்டசபையின் ஆயுட்காலத்தை குறைக்க கூடாது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைக்கு ஜெயலலிதா ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என கூறப்பட்டு உள்ளது.


Next Story