ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? அப்பல்லோ மருத்துவர் உணர்ச்சிவசம்


ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அளித்த சிகிச்சை என்ன? அப்பல்லோ மருத்துவர் உணர்ச்சிவசம்
x
தினத்தந்தி 6 July 2018 10:45 PM GMT (Updated: 6 July 2018 10:03 PM GMT)

விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த அப்பல்லோ மருத்துவர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய ரமா (இவர், தற்போது போரூரில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்), செவிலியராக பணியாற்றி வரும் விஜயலட்சுமி ஆகியோர் நேற்று ஆணையத்தில் ஆஜராகினர்.

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மருத்துவர் ரமா பெரும்பாலான நாட்கள் பணியில் இருந்துள்ளார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்றும், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட போதும் ரமா பணியில் இருந்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை எப்படி இருந்தது?, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தினத்தன்று நடந்தது என்ன? என்பது குறித்து மருத்துவர் ரமாவிடம் நீதிபதி ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகளை கேட்டார்.

மருத்துவர் ரமா ஆணையத்தில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நான் அவரை பலமுறை பார்த்துள்ளேன். அவர், என்னிடம் பல நாட்கள் பேசி உள்ளார். 2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி மாலை 4.20 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது நானும், மருத்துவர் ரமேசும் அங்கு இருந்தோம். ஜெயலலிதா மூச்சுவிட முடியாமல் திணறினார். அவருக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட்டது.

உடனடியாக நாங்கள், இதய பகுதியில் அழுத்தம் கொடுத்து மூச்சு திணறலில் இருந்து விடுபடுவதற்கு தேவையான முதல் உதவி சிகிச்சையை சுமார் 40 நிமிடம் மேற்கொண்டோம். இதற்கிடையே சசிகலா வார்டுக்குள் வந்தார். அவர் ஜெயலலிதாவை பார்த்து, ‘அக்கா பயப்படாதீங்க..., ஒன்றும் ஆகாது’ என்று ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை மோசமானது. இதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவை காப்பாற்ற அங்கேயே இருதய அறுவை சிகிச்சை (ஓப்பன் கார்ட் சர்ஜரி) மேற்கொள்ளப்பட்டது.

முடியாத பட்சத்தில் எக்மோ பொருத்தி சிகிச்சை அளித்தோம். இந்த நேரத்தில் சசிகலா பதற்றமாக இருந்தார். அவருக்கு நாங்கள் ஆறுதல் கூறினோம். ஜெயலலிதாவை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டோம். ஆனால், அது முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

டிசம்பர் 4-ந் தேதி நடந்த சம்பவத்தை பற்றி மருத்துவர் ரமா கூறும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

இதேபோன்று, செவிலியர் விஜயலட்சுமியும் டிசம்பர் 4-ந் தேதி பணியில் இருந்துள்ளார். அன்றைய தினம் நடந்த சிகிச்சை குறித்து அவரும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் ஆய்வு மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆணையம் தரப்பு வக்கீல்கள் தாக்கல் செய்த மனு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் மகாலட்சுமி ஆகியோரிடம் சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணை செய்வதற்காக அவர்கள் வருகிற 10-ந் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோன்று, அன்றைய தினம் மறு விசாரணைக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆஜராகவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

12-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோரும், 13-ந் தேதி அப்பல்லோ மருத்துவர் பத்மா, செவிலியர் மகேசுவரி ஆகியோரும் விசாரணைக்காக ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 

Next Story