சென்னை விமான நிலையத்தில் கல்லூரி பேராசிரியருடன் டி.வி. நடிகை வாக்குவாதம்

தன்னை செல்போனில் புகைப்படம் எடுத்த கல்லூரி பேராசிரியருடன் டி.வி. நடிகை வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர்,
ஐதராபாத்தை சேர்ந்தவர் விஜய்பிரகாஷ்(வயது 43). இவர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
அதே விமானத்தில் டி.வி. நடிகை ஒருவர், சக நடிகரான சையத் அன்வர் என்பவருடன் வந்தார். அப்போது விஜய்பிரகாஷ், விமானத்தில் ‘செல்பி’ எடுப்பதுபோல் டி.வி. நடிகையை தனது செல்போனில் புகைப்படங்கள் எடுத்ததாக தெரிகிறது.
வாக்குவாதம்
இதை கவனித்த அந்த நடிகை, விஜய்பிரகாஷிடம் தனது புகைப்படங்களை அழிக்குமாறு கூறினார். ஆனால் அவர், அதுபோல் நான் எந்த புகைப்படமும் எடுக்கவில்லை என்றார். இதையடுத்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர், மீண்டும் விஜய்பிரகாஷிடம் தனது புகைப்படங்களை அழிக்குமாறு கூறினார்.
ஆனால் அவர் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த நடிகை, விஜய் பிரகாசுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மன்னிப்பு கேட்டார்
இதையடுத்து நடிகையுடன் வந்த துணை நடிகர் சையத் அன்வர், விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார், விஜய் பிரகாஷிடம் இருந்த செல்போனை வாங்கி பார்த்தனர்.
அதில் அவர், நடிகையை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து இருப்பது தெரிந்தது. அந்த புகைப்படங்களை போலீசார் அழித்தனர்.
மேலும் தனது செயலுக்கு நடிகையிடம் விஜய் பிரகாஷ் மன்னிப்பு கேட்டார். இதனால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story