போலீஸ் டி.ஜி.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்த சேலம் வாலிபர் கைது


போலீஸ் டி.ஜி.பி.க்கு கொலை மிரட்டல் விடுத்த சேலம் வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2018 11:45 PM GMT (Updated: 2018-07-07T04:59:56+05:30)

போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சேலம் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை-சேலம் பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசினார்.

போலீஸ் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் மர்ம நபர் பேசினார். டி.ஜி.பி.யின் செல்போனிலும் பேசி அந்த மர்மநபர் என்கவுண்ட்டர் முறையில் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். ரெயில்வே போலீசுக்கும் அந்த மர்மநபர் பேசி மிரட்டினார்.

இதுதொடர்பாக சைபர்கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் டி.ஜி.பி.க்கு மிரட்டல் விடுத்த நபர் சேலத்தில் இருந்து பேசியதும், அந்த நபரின் பெயர் விஜய்பாபு (வயது 36) என்பதும் தெரிய வந்தது. அவர் தனது தந்தையின் செல்போனில் இருந்து பேசி மிரட்டல் விடுத்ததும் கண்டறியப்பட்டது.

அவர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. உடனடியாக சேலம் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மிரட்டல் ஆசாமி விஜய்பாபு கைது செய்யப்பட்டார். அவர் சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தான் ஒரு ராணுவ வீரர் என்றும் கூறினார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

Next Story