அறிவியல் செய்தியை தலைப்பு செய்தியாக ‘தினத்தந்தி’ வெளியிட்டது அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு


அறிவியல் செய்தியை தலைப்பு செய்தியாக ‘தினத்தந்தி’ வெளியிட்டது அமைச்சர் க.பாண்டியராஜன் பேச்சு
x
தினத்தந்தி 7 July 2018 10:45 PM GMT (Updated: 7 July 2018 10:32 PM GMT)

கடவுள் துகள் கண்டுபிடிப்பின்போது அறிவியல் செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டு தினத்தந்தி ஆச்சரியப்படுத்தியது என்று அமைச்சர் க.பாண்டியராஜன் பேசினார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர், சைவ சித்தாந்தப் பெருமன்றம் செம்மொழித் தமிழ் தீர்மானம் நிறைவேற்றியதன் நூற்றாண்டு (1918-2018) நிறைவு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு சைவ சித்தாந்த பெருமன்ற தலைவரும், சைவ சித்தாந்த துறை தலைவருமான நல்லூர் சா.சரவணன் தலைமை தாங்கி, ‘செம்மொழித் தமிழும் சைவ சித்தாந்தப் பெருமன்றமும்’ என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகளுக்கு 2018-ம் ஆண்டுக்கான’ சைவ சித்தாந்த பெருமன்ற காவலர்’ விருதையும், 2017-ம் ஆண்டுக்கான விருதை மு.ரகுபாய்க்கும் அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

இந்து மதத்தில் இறைவனை அடையும் இரு வழிகளாக சைவமும், வைணவமும் திகழ்ந்து வருகின்றன. களப்பிரர் காலத்தில் தமிழகத்தில் புத்த மதமும், சமண மதமும் வேகமாகப் பரவி வந்தன. அந்த காலகட்டத்தில் சைவம், வைணவம் என சித்தாந்த ரீதியில் பிளவுபட்டிருந்த இந்து மதத்தை சைவ பக்தி இலக்கியங்களான தேவாரமும், திருவாசகமும், வைணவ பக்தி இலக்கியமான நாலாயிர திவ்யப் பிரபந்தமும் மீட்டெடுத்தன. உலகத்தில் மதத்தை மீட்டெடுத்த மொழி என்ற பெருமை தமிழுக்கு மட்டுமே உண்டு. சிவனால் படைக்கப்பட்ட மொழி தமிழ் என்று சைவர்கள் நம்புகின்றனர்.

தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க வேண்டும் என நூறாண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றியது சைவ சித்தாந்த பெருமன்றம். சிவனும், தமிழும் ஒன்று என்ற சித்தாந்த ரீதியான அடிப்படையில் ஆன்மிக தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த பணியை இந்த அமைப்பு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. சைவ சித்தாந்தத்தின் பாடல்களை மேலும் எளிமைப்படுத்தி இளைய தலைமுறையினரிடத்தில் எடுத்துச்செல்ல முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ‘பெர்ன்’ ஆய்வுக்கூடத்தில் ‘போசோன்’ என்ற துகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஆய்வுக்கூடத்தில் சிதம்பரம் நடராஜர் திருஉருவமும் அமைந்து உள்ளது. புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் என்ற அடிப்படை துகள்களுடன் ‘போசேர்’ என்ற 4-வது அடிப்படை கடவுள் துகள்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் மிக முக்கியமான உந்து சக்தியாக இருந்தது. இந்த ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பு அறிவியல் செய்தியை தலைப்பு செய்தியாக வெளியிட்டு ‘தினத்தந்தி’ ஆச்சரியப்படுத்தியது.

தமிழகத்தில் ஆன்மிகத் தமிழ் வளர்ச்சிக்கு அ.தி.மு.க. பெரும்பங்களிப்பை வழங்கியுள்ளது. அதற்காக மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளனர். குறிப்பாக அறிவியல் தமிழையும், ஆன்மிக தமிழையும் இரண்டு கண்களாக கொண்டவர் ஜெயலலிதா. உலக அளவில் ஆன்மிகத்தேடல் மீண்டும் பரவும் ஒரு கால கட்டம் வந்து கொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் ஆன்மிகத் தமிழும் வேகமாக பரவும். அதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மலேசியாவில் காலை வணக்கம் கூறும் போது ‘ஓம் நமசிவாய’ என்ற பழக்கம் உருவாகி வருகிறது. அந்த நாட்டில் மதத்தையும் மொழியையும் ஒன்றாக நினைக்கின்றனர். அதேபோன்று தமிழகத்தில் மொழி, கலை, பண்பாடு ஆகிய மூன்று விஷயங்களையும் ஒருங்கிணைத்து கட்டமைத்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும். உலக அளவில் 10.5 கோடி தமிழர்கள் உள்ளனர். இவர்களை மையமாகக் கொண்டு ஒரு தமிழ் கொள்கை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் வகுக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழின் வளர்ச்சிக்கு தமிழகத்தில் உள்ள திருமடங்களும், ஆதீனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இத்தகைய முயற்சிகள் மூலம் ‘யுனெஸ்கோ’ ஆய்வின் படி உலக மொழிகளில் செல்வாக்கு மிகுந்த பட்டியலில் தமிழை 14-வது இடத்திலிருந்து 10-வது இடத்துக்கு 3 ஆண்டுகளுக்குள் கொண்டுவர முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் இ.சுந்தரமூர்த்தி, ம.ராசேந்திரன், இயற்கை ஆர்வலர் மழை ராஜூ, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மேக்ஸ்வெல் ஜூடே ஆகியோர் பேசினார்கள்.

முன்னதாக ஜெ.வசந்தகுமாரி, இரா.வெற்றி வேந்தன் ஆகியோர் வரவேற்றனர். செயலாளர் சீ.ஞானப்பிரகாசம் நன்றி கூறினார். சைவ சிந்தாந்தப் பெருமன்றம், சென்னை பல்கலைக்கழக சைவ சிந்தாந்தத் துறை ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. 

Next Story