அரசு பள்ளி ஏழை மாணவர்கள் கணினி வழியே எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? மு.க. ஸ்டாலின் கேள்வி


அரசு பள்ளி ஏழை மாணவர்கள் கணினி வழியே எப்படி நீட் தேர்வு எழுத முடியும்? மு.க. ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 8 July 2018 7:52 AM GMT (Updated: 2018-07-08T13:22:51+05:30)

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினி வழியே எப்படி நீட் தேர்வு எழுத முடியும் என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

டெல்லியில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்பொழுது, நீட் தேர்வானது பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் கணினி முறையில் நடத்தப்படும் என கூறினார்.

தொடர்ந்து அவர், பாடத்திட்டம், தேர்வுகள் கட்டணத்தில் மாற்றம் இல்லை. தேர்வுகள் வெளிப்படையானதும் பாதுகாப்பானதாகவும் இருக்கும். கணினி முறையில் தேர்வு நடந்தாலும் இது ஆன் லைன் தேர்வு இல்லை.

தேர்வுகளுக்கான தேதிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும்.  மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்கப்படும் என்று கூறினார்.

மாணவர்கள் கணினி அறிவுடன் இருப்பதால் தேர்வுகள் நடத்துவதில் சிரமம் இருக்காது.   தேர்வுகள் இரண்டு கட்டமாக நடப்பதால் மாணவர்கள் மொத்தமாக தேர்வு எழுதுவது தடுக்கப்படும் என கூறினார்.

இந்த நிலையில், நீட் தேர்வை கணினி மயம் ஆக்குவதற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழக மாணவர்களின் மருத்துவ கனவையும், சமூக நீதியையும் சீரகுலைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் கணினியே இல்லாத குடும்பங்களில் வாழ்பவர்கள்.  இயலாமை நிறைந்த சூழலில் கணினி வழியே எப்படி தேர்வு எழுத முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவ படிப்பு கிராமப்புற மாணவர்களுக்கு எட்டா கனியாக இருப்பதற்கே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.  நீட் தேர்வு வழியே மருத்துவ கனவை சீர்குலைக்கும் மத்திய அரசுக்கு கிராமப்புற மாணவர்கள் பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


Next Story