லோக் அயுக்தா சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்படுகிறது 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிகிறது


லோக் அயுக்தா சட்ட மசோதா இன்று நிறைவேற்றப்படுகிறது 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிகிறது
x
தினத்தந்தி 8 July 2018 8:30 PM GMT (Updated: 8 July 2018 7:42 PM GMT)

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் லோக் அயுக்தா சட்ட மசோதா இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படுகிறது. 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிவுக்கு வருகிறது.

சென்னை, 

தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் லோக் அயுக்தா சட்ட மசோதா இன்று (திங்கட்கிழமை) நிறைவேற்றப்படுகிறது. 22 நாட்கள் நடைபெற்ற கூட்டமும் முடிவுக்கு வருகிறது.

லோக் அயுக்தா சட்ட மசோதா

தமிழக சட்டசபையில் கடந்த மார்ச் மாதம் 2018-2019-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே மாதம் 29-ந் தேதி முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 நாட்கள் நடைபெற்ற சட்டசபை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நிறைவடைகிறது.

இன்றைய கூட்டம் வழக்கம் போல் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், ஊழலுக்கு எதிரான லோக் அயுக்தா சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகள் ஆதரவு

ஊழலுக்கு எதிரான மசோதா இது என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்க இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உள்ளிட்டோர் இந்த மசோதாவை ஆதரித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட உள்ளது.

அதன்பிறகு, கடந்த 5-ந் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுத்துறை, மாநில சட்டமன்றம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மீதான பதிலுரை இடம்பெறுகிறது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். இறுதியாக, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிட இருக்கின்றனர்.

16-வது மாநிலமாக தமிழகம்

இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளில், லோக் அயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏற்கனவே, கடந்த 2013-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2014-ம் ஆண்டு நடைமுறைக்கும் வந்தது. இதுவரை, லோக் அயுக்தா விசாரணை மன்றம், மராட்டியம், பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஆந்திரா, இமாச்சலபிரதேசம், கர்நாடகா, அசாம், குஜராத், கேரளா, பஞ்சாப், டெல்லி, அரியானா, ஒடிசா ஆகிய 15 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தெலுங்கானா, அருணாசல பிரதேசம், திரிபுரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அமைக்கப்படவில்லை.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு ஒன்றில் நீதிபதிகள், “ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் அயுக்தாவை தமிழ்நாட்டில் அமைக்காதது ஏன்?. லோக் அயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜூலை 10-ந் தேதிக்குள் (அதாவது நாளை) அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதன் அடிப்படையில்தான் 16-வது மாநிலமாக தமிழகத்தில் லோக் அயுக்தா சட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story