தொலைக்காட்சியில் அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைக்கழகம் எச்சரிக்கை


தொலைக்காட்சியில் அ.தி.மு.க.வினர் கருத்து தெரிவிக்க கட்டுப்பாடு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமைக்கழகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 9:30 PM GMT (Updated: 8 July 2018 8:16 PM GMT)

தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களை தவிர மற்ற அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் வலியுறுத்தி கூறியுள்ளது.

சென்னை, 

தொலைக்காட்சி விவாதங்களில் அ.தி.மு.க. அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களை தவிர மற்ற அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் வலியுறுத்தி கூறியுள்ளது.

இதுதொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

செய்தித் தொடர்பாளர்கள்

தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் விவாதங்கள் மற்றும் இன்னபிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அ.தி.மு.க.வின் கருத்துகளை எடுத்துரைப்பதற்காக, கட்சியின் ஒருங் கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோரால், அ.தி.மு.க. சார்பில் செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே தொலைக்காட்சிகள் மற்றும் சமூகத் தொடர்பு ஊடகங்களில் நடத்தப்படும் விவாதங்கள் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்று கட்சியின் கருத்துகளை தெரிவிப்பார்கள் என்று சம்பந்தப்பட்ட நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை

எனவே, அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் என்பது போன்ற அடையாளங்களை கூறிக்கொண்டு சிலர் தொலைக்காட்சிகளில் கூறிவரும் கருத்துகள் அ.தி.மு.க.வின் கருத்துகள் அல்ல. அவ்வாறு ஓர் அடையாளத்தை கூறிக்கொண்டு தங்கள் கருத்துகளை அ.தி.மு.க.வின் கொள்கை நிலைப்பாடாக எடுத்துரைக்க எந்த ஒரு நபருக்கும் அனுமதியோ, ஒப்புதலோ தரப்படவில்லை.

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் மட்டுமே கட்சியின் கருத்துகளை எடுத்துரைப்பார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இதையும் மீறி அ.தி.மு.க.வின் கருத்துகள் என ஊடகங்களில் நடைபெறும் விவாதங்களில் கலந்துகொண்டு கருத்துகளை தெரிவிப்பவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் இதுபோன்ற நபர்களை அ.தி.மு.க.வினர் என குறிப்பிடக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

பத்திரிகைகளும், ஊடகங்களும் அன்புகூர்ந்து அ.தி.மு.க.வின் சார்பில் கருத்துகளை கூற, கட்சியின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர்களை மட்டுமே அழைக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story