தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை 4-வது நாளாக நீடிப்பு உரிமையாளரிடம் ரகசிய இடத்தில் விசாரணை


தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறையினரின் சோதனை 4-வது நாளாக நீடிப்பு உரிமையாளரிடம் ரகசிய இடத்தில் விசாரணை
x
தினத்தந்தி 8 July 2018 9:00 PM GMT (Updated: 8 July 2018 8:22 PM GMT)

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது.

நாமக்கல், 

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நேற்று 4-வது நாளாக நீடித்தது. இதற்கிடையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருமான வரித்துறையினர் சோதனை

முறைகேடு புகார் காரணமாக சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டைகளை வினியோகம் செய்து வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள அந்த தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகம், மோர்பாளையத்தில் உள்ள மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியின் வீடு, ஆடிட்டர் ராமச்சந்திரனின் வீடு ஆகிய இடங்களில் நேற்று முன்தினம் 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடந்தது.

4-வது நாளாக நீடித்தது

இந்த நிலையில் ஆண்டி பாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 4-வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நீடித்தது. இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாகவும், இதேபோல தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் பயன்படுத்தி வந்த வங்கி லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என தெரிகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகே இதுகுறித்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என கூறப்படுகிறது.

உரிமையாளரிடம் விசாரணை

இதற்கிடையில் அந்த தனியார் மாவு நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியை நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் சத்துணவு முட்டை முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறை சோதனை நடந்தபோது, வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று படுகாயம் அடைந்த தனியார் நிறுவன காசாளர் கார்த்திகேயன் (வயது 32) சேலம் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் தற்போது மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

வருமான வரித்துறை சோதனை காரணமாக கோழிப்பண்ணைகளுக்கு கிறிஸ்டி நிறுவனம் வழங்க வேண்டிய சுமார் ரூ.10 கோடி முடக்கப்பட்டு உள்ளதாக கோழி பண்ணையாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Next Story