எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 July 2018 9:30 PM GMT (Updated: 8 July 2018 8:28 PM GMT)

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் அருகே மண்டபத்தை சேர்ந்த தந்தை-மகன் உள்பட 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறை பிடித்துச் சென்றனர்.

பனைக்குளம், 

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் அருகே மண்டபத்தை சேர்ந்த தந்தை-மகன் உள்பட 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறை பிடித்துச் சென்றனர்.

4 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் விசைப்படகுகள் உள்ளன. மண்டபத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதன் மூலம் உள்ளூர் மீனவர்களும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு செல்லும் மீனவர்கள் நடுக்கடலுக்கு சென்று இரவு முழுவதும் தங்கி இருந்து விலை உயர்ந்த இறால், நண்டு, கனவாய், சீலா, வாவல் உள்ளிட்ட மீன்களை பிடித்து விட்டு மறுநாள் காலை கரை திரும்புவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மண்டபத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சாத்தக்கோன்வலசை ஊராட்சி பிள்ளைமடத்தை சேர்ந்த முத்து இருளாண்டி (வயது 42), புதுமடம் ஊராட்சி அகஸ்தியர் கூட்டம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (46), இவரது மகன் தினேஷ்குமார் (22), குத்துக்கல் வலசையை சேர்ந்த கோவிந்தராஜ் (35) ஆகியோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி அந்த படகையும், அதில் இருந்த மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்தில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கு விசாரணை நடத்தி யாழ்ப்பாணம் மீன்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 4 பேரும் ஊர்க்காவல்துறை கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் வருகிற 13-ந் தேதி வரை மீனவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பேட்டி

இது குறித்து பிள்ளை மடத்தை சேர்ந்த மீனவர் முத்து இருளாண்டி மனைவி கூறுகையில், “எனது கணவர் மங்களூரில் மீன்பிடி தொழிலுக்கு சென்று அங்குதான் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர் குடும்ப செலவுக்கு பணம் இல்லாததால் மண்டபத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு சென்று பணம் கொண்டு வருவதாக கூறிச்சென்றார். ஆனால் எங்கள் நேரம் சரியில்லாததால் இலங்கை கடற்படையினர் எனது கணவரை சிறைபிடித்து சென்றுள்ளனர்.

எங்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்களை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்பது தெரியவில்லை. இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள எனது கணவரை எப்போது விடுதலை செய்வார்கள் என்று தெரியவில்லை” என்று தெரிவித்து கதறி அழுத அவர் உடனடியாக இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

ஏற்கனவே கடந்த 4-ந் தேதி 2 விசைப்படகுகளுடன், ராமேசுவரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story