சென்னையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை


சென்னையில் பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 9 July 2018 12:00 AM GMT (Updated: 8 July 2018 8:36 PM GMT)

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை, 

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அமித்ஷா வருகை

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை, தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரையில், தமிழகத்தில் 5 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை கண்காணிப்பதற்கு 25 தனி பொறுப்பாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏறக்குறைய 2,750 பேர் மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும், 13,056 பேர் சக்தி கேந்திரா பொறுப்பாளர்களாகவும் ஏற்கனவே பணியாற்றி கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தான் அமித்ஷாவின் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருக்கும் சிறப்பு அழைப்பாளர்கள். இவர்களுக்கான அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டு விட்டன. எனவே வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் தவிர கூட்டத்துக்கு வெளி ஆட்கள் யாரும் வரமுடியாது.

தாக்கமும், ஊக்கமும்...

அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தையும், எங்களுக்கு உற்சாக ஊக்கத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனென்றால் பா.ஜ.க. குறித்து நிறைய விமர்சனங்கள் எழுகின்றன. எந்த கட்சியாக இருந்தாலும், அது அடிப்படையிலே வளர்ந்து வரவேண்டியது இயல்பு தான். தேசிய கட்சி ஒன்று தமிழகத்தில் காலூன்றுவது என்பது அவ்வளவு சுலபம் கிடையாது.

நாளை (இன்று) காலை 11 மணிக்கு சென்னை வரும் அமித்ஷா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பகல் 12 மணிக்கு வி.ஜி.பி. தங்க கடற்கரை சாலைக்கு வருகிறார். பகல் 12 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை எங்கள் உயர் மட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்கிறார். பிற்பகல் 2 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை உணவு நேரம்.

கூட்டணி பேச்சுவார்த்தை கிடையாது

அதனைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை பா.ஜ.க. பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களுடன் கலந்துரையாடுகிறார். மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி சக்தி மற்றும் மகா சக்தி கேந்திரா அமைப்பின் பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடுகிறார்.

அமித்ஷாவின் சென்னை வருகையில் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் இடம்பெற போவதில்லை. முக்கிய பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவும் திட்டம் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கிடையாது. இது அமைப்பு ரீதியான ஒரு கூட்டம். இது முழுக்க முழுக்க பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க.வை தயார்படுத்தும் நிகழ்வுக்காக நடைபெறும் முக்கிய கூட்டம். இதில் அதற்கான வியூகங்கள் வகுப்பது குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வளர்ச்சிக்கு வித்திடுவது, பா.ஜ.க.

இதனைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி பங்கேற்பாரா?

பதில்:- அதிகம் வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி:- ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறதே?

பதில்:- 1971-ம் ஆண்டு வரையில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தான் தேர்தல் நடந்தது. அப்படி ஒரு நடைமுறை தற்போது வந்தால் நிறைய நன்மைகள் தான் ஏற்படும்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் கூட, நேர்மறையான கருத்துகள் தான் மக்களிடம் எடுத்து செல்லப்படுகின்றன. சேலத்தை இன்னொரு தூத்துக்குடியாக்க முயற்சி நடக்கிறது. இத்திட்டம் நமக்கு மிகப்பெரிய முன்னேற்றம் கொடுக்கும் திட்டம். இது விவசாயிகளுக்கு எதிரான திட்டம் அல்ல. வளர்ச்சிக்கு வித்திடுவது பா.ஜ.க. தான்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

ரங்கசாமி

சென்னைக்கு இன்று வரும் அமித்ஷாவை புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி சந்தித்து பேச உள்ளார். ஏற்கனவே அமித்ஷா புதுவை வந்தபோது அவரை ரங்கசாமி சந்தித்து பேசினார்.

Next Story