மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட கேரளா வாலிபர் கைது போலி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து முறைகேடு


மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட கேரளா வாலிபர் கைது போலி இணையதளத்தில் விளம்பரம் கொடுத்து முறைகேடு
x
தினத்தந்தி 8 July 2018 10:15 PM GMT (Updated: 8 July 2018 8:54 PM GMT)

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி, அதில் விளம்பரம் கொடுத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி, அதில் விளம்பரம் கொடுத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

பொதுமேலாளர் புகார்

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பொதுமேலாளர், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் www.chennaimetrirail.org என்ற இணையதளத்தில் செயல்படுகிறது. ஆனால் சில நபர்கள் மெட்ரோ ரெயில் நிறுவனம் பெயரில் www.cmrlco.org என்ற போலியான இணையதளத்தை உருவாக்கி, அதில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாக போலியான விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு வேலைகேட்டு தகவல் அனுப்புகிறார்கள். இது ஒரு மோசடி நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நபரை கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கேரளா வாலிபர் கைது

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். துணை கமிஷனர் செந்தில்குமார், உதவி கமிஷனர் வேல்முருகன் ஆகியோர் மேற்பார்வையில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அன்பரசன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பெயரில் போலியான இணையதளம் உருவாக்கி, அதில் வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டதாக கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூரை சேர்ந்த ஸ்ரீஜித் (வயது 34) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சொந்த ஊரில் அவரை கைது செய்து, தனிப்படை போலீசார் நேற்று பகலில் அவரை சென்னைக்கு அழைத்து வந்தனர். தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார் என்று சைபர் கிரைம் போலீசார் நேற்று இரவு தெரிவித்தனர்.

Next Story