என்ஜினீயரிங் படிப்பு: சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவு


என்ஜினீயரிங் படிப்பு: சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவு
x
தினத்தந்தி 8 July 2018 10:00 PM GMT (Updated: 8 July 2018 8:59 PM GMT)

என்ஜினீயரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது.

சென்னை, 

என்ஜினீயரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நிறைவடைந்தது.

என்ஜினீயரிங் படிப்பு

என்ஜினீயரிங் படிப்புக்கான சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு கடந்த 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது. 167 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 117 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் (7-ந் தேதி) முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. 143 இடங்களுக்கு 230 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 67 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

விளையாட்டு பிரிவு மாணவர்கள்

இந்த நிலையில் விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. மொத்தம் 495 இடங்களுக்கு 684 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் 282 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இட ஒதுக்கீட்டில் முதல் 3 இடங் களை பிடித்தவர்களின் பெயர் மற்றும் தேர்வு செய்த கல்லூரியின் விவரம் வருமாறு:-

தனுஷ்சுரேஷ்(நீச்சல்) - அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்’ பாடப்பிரிவை தேர்வு செய்தார்.

காவ்யாஸ்ரீ(நீச்சல்) - அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘பயோ டெக்’ பாடப்பிரிவை தேர்வு செய்தார்.

சன்யுக்தா(சதுரங்கம்) - அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்’ பாடப்பிரிவை தேர்வு செய்தார்.

இடஒதுக்கீட்டில் முதல் இடத்தை பிடித்த தனுஷ்சுரேஷ் நீச்சலில் பல்வேறு பதக்கங் களை பெற்று இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘5 வயதில் நீச்சல் பழகினேன். அதில் இப்போது தேசிய அளவிலும், உலக அளவிலும் பல்வேறு பதக்கங்களை பெற்று இருக்கிறேன். நான் எப்படியாவது ஒலிம்பிக்கில் சேர்ந்து பதக்கங்களை பெறுவது தான் என்னுடைய லட்சியம். 2020 ஒலிம்பிக்கில் பங்கு பெற ஆவலாய் இருக்கிறேன்’ என்றார்.

பொது கலந்தாய்வு எப்போது?

சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கோர்ட்டு ஜூலை 30-ந் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க முடியாது. அதனால் கூடுதல் காலஅவகாசம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கு மீதான விசாரணை நாளையோ (இன்று) அல்லது நாளை மறுநாளோ(நாளை) நடைபெற இருக்கிறது. அதில் வரும் தீர்ப்பை பொறுத்து பொது கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்’ என்றனர்.

Next Story