18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறியஐகோர்ட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல் + "||" + Murder threat to the Court of Justice
Huge police protection home
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்று தீர்ப்பு கூறியஐகோர்ட்டு நீதிபதிக்கு கொலை மிரட்டல்
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனி சாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.
சென்னை,
முதல்-அமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்தனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம்
அவர்களில் ஜக்கையன் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகர் ப.தனபாலை சந்தித்து விளக்கம் அளித்தார். இதைத் தொடர்ந்து மற்ற 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். அந்த 18 பேரும், சபாநாயகரின் முடிவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
ஐகோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 18 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரால் தகுதிநீக்கப்பட்டது செல்லும் என்று தீர்ப்பு வழங்கினார். மற்றொரு நீதிபதியான எம்.சுந்தர், 18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பால், தற்போது இந்த வழக்கை 3-வது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார்.
நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்
இந்த நிலையில், நீதிபதி சுந்தருக்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில், “18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று தீர்ப்பு அளித்த உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்துவிடுவோம்” என்று எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி சுந்தர், அந்த கடிதத்தை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
பலத்த பாதுகாப்பு
இதைத்தொடர்ந்து, சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்து இருக்கும் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி எம்.சுந்தரின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த பகுதியில் போலீசார் தடுப்பு வேலி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.