ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பரிந்துரைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு இந்திய சட்ட ஆணையத்துக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பரிந்துரைக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு இந்திய சட்ட ஆணையத்துக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 8 July 2018 11:45 PM GMT (Updated: 2018-07-09T03:36:41+05:30)

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பரிந்துரைக்கு தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, இந்திய சட்ட ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான பரிந்துரைக்கு தி.மு.க. கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, இந்திய சட்ட ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.எஸ்.சவுகானுக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. கருத்து

இந்தியாவில் ஒரே நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், அறிஞர்களிடம் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்டு, தாங்கள் கடந்த ஜூன் 14-ந்தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எங்களுக்கு கிடைத்தது. இதுகுறித்து தி.மு.க.வின் கருத்தை தெரிவிக்கும் வகையில் இக்கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

தி.மு.க.வை பொறுத்தவரையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், ஜனநாயக கோட்பாடுகளுக்கும் எதிராக அமைந்துவிடும்.

தனித்துவம்

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தும் திட்டம் குறித்த வரைவு அறிவிப்பு இந்திய சட்ட ஆணையத்தின் இணையதளத்தில் கடந்த ஏப்ரல் 17-ந்தேதி வெளியிடப்பட்டது.

அதில், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால், இந்த தேர்தலையும் சேர்த்து நடத்துவது குறித்து பரிசீலிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், சட்டசபைக்கு என்று இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் தனித்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக, சட்டசபைக்கு உள்ள தனித்துவத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் அழிக்கும் விதமாக திருத்தங்களை கொண்டு வரக்கூடாது.

ஒப்பிடுவதா?

மேலும், சுவீடன், பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறைதான் உள்ளது என்று உதாரணம் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகள் எல்லாம் மிகவும் சின்ன நாடுகள்.

சுவீடன் நாட்டில் மொத்த ஜனத்தொகையே 1 கோடி தான். அதேபோல, பெல்ஜியமில் 1.1 கோடி, தென் ஆப்பிரிக்காவில் 5.5 கோடி என்று மக்கள் தொகை உள்ளன. இவை, தமிழ்நாடு ஜனத் தொகையை (7.9 கோடி)விட மிகவும் குறைவானது ஆகும். இந்தியா என்பது 132 கோடி ஜனத்தொகையை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு. மிகச்சிறிய நாடுகளை கொண்டு, நம் நாட்டை ஒப்பிட்டு பார்ப்பது என்பது தவறான முடிவுக்கு கொண்டு சென்று விடும்.

சாத்தியம் இல்லை

மேலும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், இந்திய சட்ட ஆணையம் இதேபோன்ற வரைவு அறிக்கையை 1999-ம் ஆண்டு வெளியிட்டது. ஆனால், இதுவரை அந்த அறிக்கையின் அடிப்படையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், இதுகுறித்து கடந்த 2015-ம் ஆண்டு பாராளுமன்ற நிலைக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், நாட்டில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் கருத்துக்களின் அடிப்படையில், ஒரே நேரத்தில் நாடாளுமன்றம், சட்ட சபைக்கு தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளது. இதை இந்திய சட்ட ஆணையம் நினைவில் கொள்ள வேண்டும்.

பயன் இல்லை

எனவே, இந்த சூழ்நிலையில், இந்த விவகாரம் குறித்து இந்திய சட்ட ஆணையம் ஏற்கனவே விரிவாக பரிசீலித்துவிட்டது. ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த முடியவே முடியாது என்று நாடாளுமன்ற நிலைக்குழுவும் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தேவையில்லாமல் மீண்டும் ஒரு போலி அறிக்கையை வெளியிடுவதால், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எந்த ஒரு பயனும் ஏற்படப் போவது இல்லை என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.

அதேநேரம், இதுபோன்ற செயல்களினால், இந்திய சட்ட ஆணையத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மையும் குறைந்துவிடும் என்பதையும் தெளிவுப்படுத்துகிறேன்.

கடுமையான எதிர்ப்பு

அதனால், ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவது என்ற இந்திய சட்ட ஆணையத்தின் இந்த வரைவு அறிக்கையே முற்றிலும் துரதிருஷ்டவசமானது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையே சீர்குலைத்துவிடும். எனவே, ‘ஒரு இந்தியா ஒரு தேர்தல்’ என்ற இந்த பரிந்துரையை தி.மு.க. கடுமையாக எதிர்க்கிறது.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Next Story